Sunday, April 10, 2016

உபநிடதம்


ஈசா வாஸ்ய உபநிடதம்
உபநிடதத்தின் சாந்தி மந்திரமும் விளக்கமும்
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||
ஈச்வரன் பூரண வடிவானவர். சீவனும் பூரண வடிவானவன்.பூரணமான ஈச்வரனிடமிருந்து பூரணமான சீவன் தோண்றியுள்ளான். பூரணமான சீவனுடைய பூர்ண வடிவத்தை எடுத்துவிட்டால் எஞ்சி இருப்பது பூரணம் மட்டுமே. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
உபநிடதத்தின் மையக்கருத்து
அனைத்து உயிரினங்களும் அண்டங்களும் இறைவனால் நிரம்பப்பட்டுள்ளது. தியாகத்தால் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். யாருடைய பொருள்களை கைப்பற்ற ஆசை கொள்ளக் கூடாது. எல்லா உயிரினங்களில் ஆத்மதத்துவத்தை பார்க்கின்றவனுக்கு மயக்கம் இல்லை, துயரம் இல்லை. வேதத்தில் கூறப்பட்ட கர்ம யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு பலனாக சொர்க்கலோகம், பிதுர்லோகம் கிடைக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட பக்தி யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு அதைவிட சற்று மேலான உலகங்கள் கிடைக்கிறது. கர்ம யோகத்துடன், பக்தி யோகத்தையும் சேர்ந்து செய்பவர்களுக்கு பிரம்மலோகம் கிடைக்கிறது. மேற்படி உலகங்கள் நிலையற்றதாக இருந்த போதிலும், துயரமிக்க வாழ்வில் அடையப்படும் உயர்ந்த பலனாக கருதப்படுகிறது. கர்ம யோகம் மற்றும் பக்தி யோகத்துடன்மெய்ப்பொருள் அறிவான ஞான யோகம் என்ற வேதாந்தத்தை தகுதியான குருவின் மூலம் கேட்டு அறிந்து கொண்டவனுக்கு பிறப்பு, இறப்பு இல்லாத மேலான பெருவாழ்வான விதேக முக்தி அடைவது உறுதி.

கேன உபநிடதம்
சாந்தி மந்திர விளக்கம்
எனது உடல் உறுப்புக்கள் ஆற்றல் பெறட்டும்.வாக்கு, பிராணன், கண், செவி, மற்றும் அனைத்து உடல் உறுப்புகளும் ஆற்றல் பெறட்டும். உபநிடதங்களால் மட்டும் அறியப்படும் பிரம்மம் அனனத்துமாக உள்ளது. நான் பிரம்மத்தை மறுக்காமல் இருப்பேனாக. பிரம்மம் என்னை மறுக்காமல் இருப்பாராக. அந்த ஆத்மாவை அறியும் வழியில் முழு ஈடுபாடுடைய என்னிடத்தில் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் எவையோ அவைகள் என்னிடத்தில் இருக்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
உபநிடத சாரம்
உடல் எப்படி சடமோ, அதுபோல் மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் மனமும் சடம் என உணர்ந்து, இவற்றுக்கு வேறான , மாறாத, நிலையான மெய்ப்பொருள் உள்ளதா? என்ற சீடனின் கேள்வியுடன் இவ்வுபநிடதம் துவங்குகிறது.
அதற்கு குருவின் பதில்: எந்த பொருளை, வாக்கு, மனம், கண்கள் முதலியவைகளை விளக்காதோ, ஆனால் எந்த மெய்ப்பொருளால் மனம், பொருள், வாக்கு முதலியவைகளை விளக்குகின்றனவோ, அந்த மெய்ப்பொருளான பிரம்ம தத்துவத்தை அறிந்துகொள் என்று சீவனும் - பரமாத்மாவும் ஒன்றே (ஐக்கியம்) தத்துவத்தை கூறி , இதுவரை நீ எவற்றை வழிபட்டு வந்தாயோ, அவை அனைத்தும் உனக்கு உதவிய படிகளே தவிர மெய்ப்பொருள் அல்ல என்று உபதேசம் செய்கிறார்.
குருவின் அறிவுரையை புரிந்துகொண்ட சீடன், நான் பிரம்மத்தை அறிந்தும் உள்ளேன், அதே நேரத்தில் அறியவும் இல்லை. இதை யார் உணர்கிறார்களோ அவர்களே உண்மையை உணர்கிறார்கள். பிரம்ம தத்துவத்தை ஒரு பொருளாக அறியவில்லை. அந்த மெய்ப்பொருள் நானே என்று உணர்ந்துள்ளேன் என்று கூறினான்.
பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்தவர்கள் உண்மையில் பிரம்மத்தை அறியவில்லை. பிரம்மத்தை பொருளாக அறியாதவர்கள் பிரம்மத்தை அறிகிறார்கள். எல்லா சீவராசிகளுக்குள்ளும், தீரர்கள்தான் இந்த பிரம்மத்தை அறிந்து, அகங்காரம், மமகாரத்திலிருந்தும் விலகி மரணமற்ற மேலான சீவ முக்தி நிலையை அடைகிறார்கள். புலனடக்கம், கர்ம யோகம், வாய்மை ஆகிய வழிகள் மூலம் பிரம்ம ஞானத்தை அடையலாம். மேலும் இந்த ஞானத்தின் பலனாக ஒருவன் மேலான சீவ முக்தி மற்றும் விதேக முக்தி அடைகிறான்.

கடோபநிடதம்
இவ்வுபநிடதத்தின் சாந்தி மந்திரம் & விளக்கம்
நாவவது | நெள புநக்து | ஸஹ வீர்யம் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
அந்த இறைவன் குரு சீடர்களாகிய எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். அந்த இறைவன் எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். எங்களுக்குரிய முயற்சியை நாங்கள் இருவரும் சேர்ந்து செய்வோமாக. எங்கள் கல்வி ஒளி மிகுந்ததாக இருக்கட்டும். நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
உபநிடதத்தின் மையக்கருத்து
விச்வஜித் என்ற யாகத்தை செய்த ஒருவன் யாக முடிவில் தனது அனைத்து செல்வங்களையும் தானமாக தர வேண்டும் என்பது அந்த யாக விதி. ஆனால் அந்த யாகத்தை செய்த வாஜச்ரவசு என்பவன், தனது கறவை நின்ற பசுக்களை மட்டும் தானமாக தருவதை கண்ட அவர் மகன் நசிகேதன் தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தையை நோக்கி கேட்க, தந்தையும் எரிச்சலுடன் உன்னை எமனுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் எமலோகத்திற்கு சென்று, மூன்று பகல் இரவுகள் பசியுடன் காத்திருந்து யமதேவரை சந்திக்கின்றான்.
யமலோகத்திற்கு விருந்தாளியாக வந்த நசிகேதனை காக்க வைத்த காரணத்தால் யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் வரத்தின் மூலம் தனது தந்தை மனஅமைதி அடைந்து தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறான். எந்த ஒரு யாகத்தை செய்தால் மக்கள் சுவர்க்க லோகம் அடையமுடியும் என்பதை இரண்டாம் வரத்தின் மூலம் நசிகேதன் தெரிந்து கொள்கிறான். மூன்றாவது வரத்தின் மூலமாக, உடல் அழிந்த பின்னும் அழியாது இருக்கின்ற ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவை உபதேசிக்கும் படி வேண்டுகிறான்.
முதல் இரண்டு வரங்களை நசிகேதனுக்கு உடனே வழங்கிய யமன், மூன்றாவது வரத்தை தருவதற்கு முன் அதற்கான தகுதி நசிகேதனுக்கு உள்ளதா என யமதேவர் சோதிக்கிறார். சுவர்க்கலோகம், பிரம்மலோகம் செல்வதற்கு வழி சொல்கிறேன் என்று யமதேவர் கூறியும், நிலையற்ற அந்த லோகங்கள் வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளி தனக்கு நிலையான ஆத்ம ஞானம் எனும் பிரம்ம தத்துவம் ஒன்றே போதும் என்று நசிகேதன் உறுதியாக கூறி விடுகிறான்.
இறுதியில் யமதர்மராசன் வைத்த அனைத்துச் சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்துவத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே சீவ முக்தி (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேக முக்தி எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.

பிரசின உபநிடதம்
இவ்வுபநிடத சாந்தி மந்திரமும் விளக்கமும்
அதர்வண வேதத்தில் இந்த உபநிடதம் இருப்பதால், அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இவ்வுபநிடதத்திற்கும் பொருந்துகிறது. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|..........எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள், தேவர்களே, செவிகளால் நல்லதைக் கேட்போமாக, கண்களால் நல்லதைப் பார்ப்போமாக, உறுதியான உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அதை அனுபவிப்போமாக. ஓங்கிய புகழையடைந்த இந்திரன் எங்களுக்கு நன்மையை அருளட்டும். அனைத்தையும் அறிகின்ற சூர்ய தேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். தடையின்றிச் செல்லும் கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய பிரகசுபதி எங்களுக்கு நன்மையை அருளட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. (இங்கு சாந்தி என்ற சொல்லிற்கு தடைகள் நீங்கட்டும் என்று பொருள். இயற்கை, சூழ்நிலை, உடல் முதலிய மூன்று இடங்களிருந்து நமக்கு வரும் தடைகள் அமைதி அடைய வேண்டும். அதாவது நீங்கவேண்டும் என்று மும்முறை கூறப்படுகிறது).
உள்ளடக்கம்
முதல் கேள்வியும் அதற்கான பதிலும்: உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? பதில்: உயிரினங்களைப் படைக்கக் கடவுள் விரும்பினார். அதற்காகத் தவத்தில் ஈடுபட்டார். அதன்பின் வானத்தையும் பிராணனையும் படைத்து இந்த அனைத்து உலகங்களையும் அதனில் பொருத்தினார். உயிர்களை உற்பத்திச் செய்வதற்காக காற்று, நெருப்பு, நீர், பூமி படைத்தார்.
இரண்டாம் கேள்வியும் பதிலும்: மனிதனை இயக்குபவர்கள் யார் யார்? பதில்:வானம், காற்று, நெருப்பு, நீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் திறன் ஆகிய தேவதைகளே மனிதனை இயக்குகின்றது.
மூன்றாம் கேள்வியும் பதிலும்: பிராணன் எவ்வாறு செயல்படுகிறது? பதில்; பிராணன் ஆன்மாவிலிருந்து தோண்றுகிறது. மனிதனும் அவனுடைய நிழல் போல ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனதின் செயல்பாடுகளால் அது இந்த உடலில் வருகிறது.
நான்காவதான கேள்வியில் ஐந்து துணைக் கேள்விகளும் அதற்கான பதில்களும் : மனிதன் எத்தனை நிலைகளில் இருக்கிறான் அதன் தன்மைகள் என்ன? பதில்: ஒரு மனிதன் மூன்று நிலைகளில் வாழ்கிறான். அவைகள் 1.உறக்க நிலை 2. விழிப்பு நிலை 3.கனவு நிலை.
1. உறக்க நிலையில் மனிதனின் புலன்கள் அனைத்தும் மனதில் ஒடுங்கிவிடுகிறது. அப்போது அவன் கேட்பதில்லை, பார்பதில்லை, முகர்வதில்லை, உணர்வதில்லை, சுவைப்பதில்லை, பேசுவதில்லை(அதாவது நினைவுடன்), மகிழ்வதில்லை. உறக்க நிலையில் பிராணசக்தியாகிய மூச்சுக்காற்று மட்டும் விழித்திருக்கின்றது.
2. கனவு நிலையில் ஒரு மனிதன் தன் பெருமையை தானே அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் பார்த்தவைகள், கேட்டவைகள், அனுபவித்தவைகளை கனவு நிலையில் சில நேரங்களில் அனுபவிக்கிறான். கனவு நிலையில் காண்கின்ற மனிதர்களையும், மற்றவைகளையும் உண்மையில் இல்லை. மனமே அனைத்துமாகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது.
3. உறக்க நிலையில் இன்பத்தை அனுபவிப்பது யார் எனில், ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனமே இந்த இன்பத்தை அனுபவிக்கிறது.
4. ஒளியால் அடக்கப்படுகின்ற மனம் என்பது என்ன, என்பதற்கு உறக்க நிலையில் புலன்கள், மனம் ஆழ்மனம் ஆகியவைகள் ஒடுங்கி விடுவதால், இங்கே வெளி உலக அனுபவங்கள் மற்றும் மனவுலக அனுபவங்களான கனவுகளும் இல்லை. மேலும் புத்தி சித்தம் கூட ஒடுங்கி விடுகிறது. ஆனால்நான் என்ற உணர்வு மட்டும் விழித்து இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்ததும் ஆனந்தமாகக் உறங்கினேன் என்கிறான். இங்கு மனம் உணர்வுத் திரளில், உணர்வுக் குவியலில் ஒடுங்கி விடுகிறது என்று பொருள்.
5. அனைத்திற்கும் ஆன்மா ஆதாரமாக எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்விக்கு, பிப்பலாத முனிவர் கூறுகிறார்: கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், அறிவு, சித்தம், “நான் என்ற உணர்வு, பிராணன் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் அடங்கி விடுகிறது.
6. ஐந்தாவது கேள்வியை சத்யகாமன் என்ற மாணவன், ஓங்காரத்தின் பெருமை மற்றும் ஓங்கார மந்திரத்தை ஆழ்ந்து தியானிப்பவன் அடையும் நிலைப் பற்றி கேட்கிறான். பிப்பலாத முனிவரின் பதில்: இறைவனை குறிக்க ஒரு சொல் இருக்குமானால் அது ஓம் என்ற ஒலியே என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகிறார். இறைவனை உருவ வடிவில் தியானிப்பவன் சாதாரண நிலையில் இருப்பவன். உயர்நிலையில் இருப்பவன் இறைவனை உருவமற்ற நிலையில் தியானிப்பவன். ஓங்கார மந்திரம் என்ற எழத்துக்களின் சேர்கையால் உருவானது. இதுதான் முதன்முதலாகப் படைக்கப்பட்ட மந்திரம். இந்த மந்திரத்தின் விரிவே காயத்திரி மந்திரம். ஓங்கார மந்திரத்தை தியானிப்பதால் உணர்வில் ஒளி பெறுகிறான், மனம் பலம் பெறுகிறது, இறுதியாக பிரம்மத்தில் ஐக்கியம் அடைகிறான்.
7. ஆறாவதாக பரத்துவாசரின் மகன் சுகேசன், பிப்பிலாத முனிவரிடம்ஆத்மா வைப் பற்றி கேட்டதற்கு, ஆத்மா என்பது பிரம்மத்தின் பிரதிபிம்பமாக நம் இருதய குகையில் உள்ளது. ஆத்மாவிடமிருந்து உடலில் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பிராணன், உயிர் என்ற 16 அம்சங்கள் தோண்றின. இந்த 16 அம்சங்களால் உருவான சட உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. எனவே ஆத்மாவை அறிந்து மரணத்தை வெல்லுங்கள் என்று கூறி முடிக்கிறார் பிப்பிலாத முனிவர்.

முண்டக உபநிடதம்
பெயர்க் காரணம்
தலையில் நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும் ஒருவித வேள்வியை முடித்த பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் அல்லது தலை முடியை அகற்றிய பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதால் இப்பெயர் வரக் காரணமாயிற்று.
மையக் கருத்து
சௌனக முனிவர், எந்த ஒன்றை அறிவதனால் அனைத்தையும் அறிந்ததற்குச் சமம் என்று கேட்டதற்கு, அதற்கு அங்கிரசு முனிவர் மெய்ப்பொருளை (பிரம்மம்) அறிவதால் மட்டுமே அனைத்தையும் அறிந்ததற்கு சமம் என்று சௌனக முனிவருக்கு அருளிச் செய்தார்.
உபநிடத அமைப்பு
இந்த உபநிடதத்தில் உள்ள 65 மந்திரங்களை மூன்று அத்தியாயங்களாகவும், ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு பகுதிகளாகவும் அமைந்துள்ளது. அத்தியாயத்தைமுண்டகம் என்றும், பகுதிகளைகண்டம் என்றும் அழைப்பர்.
உபநிடத சாரம்
எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர்பரா வித்யா என்று அழைக்கப்படும் பிரம்ம ஞானம் எனும் ஆத்ம வித்யா, (பிரம்மக்ஞானம்) என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான். பிரம்மத்தை புரிந்து கொள்ளும் அறிவே பராவித்யா ஆகும். பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் அபரா வித்யா ஆகும்.
பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான். ஆனால் இறைவன் படைக்கப்பட்ட அனைத்து பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கும் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளார். .கா., சிலந்தி பூச்சியானது தான் உருவாக்கிய வலைக்கு தானே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளதோ, அதே போல் படைப்பிற்கு ஈஸ்வரனே ஒன்றே இந்த இரண்டு காரணங்களுக்கு ஒருவராகவே உள்ளார்.
ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம். மேலும் அபரா வித்யா நான்கு வேதங்களையும் அவற்றின் முடிவுப் பகுதியான உபநிடதங்களையும் விளக்குகிறது. கர்மங்களின் பலன்களும், அதனால் அடையப்படும் நிலையற்ற தன்மை விளக்கப்படுகிறது.
அபராவித்யா மூலம் மாபெரும் சம்சாரக் கடலை கடக்க முடியாது. கர்ம யோகத்தை விடஉபாசனை மூலம் சுவர்க்கத்திற்கும் மேலான பிரம்மலோகத்தை அடையலாம். பொதுவாக சுவர்க்கம் மற்றும் பிரம்ம லோகத்தை அடைந்தாலும் அதன் பலன்கள் நிலையற்றது.
வீடுபேறு அடைய கர்ம யோகம் நேரடியான வழி அல்ல என்பதை உணர்ந்து, மரபு வழியாக வந்த குருவிடம் பிரம்ம ஞானத்தை அறிந்து வீடுபேறு அடைய வேண்டும். பிரம்மத்திடமிருந்து பஞ்சபூதங்கள், பிராணன், மனம், சித்தம், அகங்காரம் தோண்றின. படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கு தலைவனாக விளங்கும் பிரம்மத்தை விராட் என்பர்.
விராட் இந்த பிரபஞ்சத்தின் உடலாக உருவகம் செய்யப்படுகிறது. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பிரம்மனே ஒவ்வொருவருடைய ஆத்ம வடிவாக உள்ளது. மேலும் பார்க்கப்படுகிற அனைத்தும் வெறும் வெளித்தோற்றமே [மித்யா] என்ற அறிவை அடைபவன் வாழ்க்கை எனும் பெரும் துயரக்கடலிருந்து விடுதலை அடைகிறான். இந்த பிரம்மமே எல்லோராலும் அடையத்தக்க முடிவான இலக்கு.
உபநிடதத்தின் துணையுடன் சீவாத்மா, பரமாத்மாவை அடைய வேண்டும். பிரம்ம ஞானத்தில் நிலை பெறத் தேவையற்ற பேச்சை நிறுத்த வேண்டும் என்று சாதனையாக கூறப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒளி விளக்குகளாக உள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், தங்கள் ஒளியால் பிரம்மத்தை விளக்காது. ஆனால் இவைகள் பிரம்மத்தால் ஒளிர்கிறது.
கயிறு பாம்பாக தெரிவது போல, தோண்றிய இந்த பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் வெறும் தோற்றமேயன்றி உன்மையல்ல என்று இந்த பிரபஞசத்தை நீக்கி, பிரம்மம் மட்டும் இரண்டற்றதாக (அத்வைதம்) உள்ளது என்று அறிய வேண்டும். பிரம்மத்தை அடைய ஞானமே அடிப்படைக் காரணம். ஞானத்தின் சாதனைகளாக வாய்மை, தவம், குரு, சாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டல், பிரம்மச்சர்யம் ஆகியவைகள் கூறப்படுகிறது. இந்த பிரம்மத்தை, அமைதியை அடைந்த மனதின் மூலம் மட்டுமே அறியமுடியும். வீடுபேறு அடைய விரும்புபவர்கள், ஞானியின் துணையுடன் தீரர்கள் துயரத்தை கடக்கிறார்கள்.
இவ்வுலகிலே அனைத்து ஆசைகளை நீக்கியவனுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை. இந்த ஆத்ம தத்துவத்தை, மனபலம் அற்றவர்களும், வைராக்கியமற்றவர்களும் அடைய முடியாது. வேதாந்த ஞானத்தை அடைந்தவர்கள், தியாகம், தூய்மை அடைந்தவர்கள், சீவன் முக்தர்களாக இருந்து கொண்டு பாவத்தையும் சோகத்தையும் கடந்து இறுதியான மரணத்தை அடைந்த பின்பு பிரம்ம வடிவாகவே இருந்து மீண்டும் பிறப்பதில்லை.

மாண்டூக்கிய உபநிடதம்
உபநிடதத்தின் சாந்தி மந்திர விளக்கம்
வணக்கத்திற்குரிய தேவர்களே, நாங்கள் செவிகளால் நல்லதை கேட்போமாக. கண்களால் நல்லதை பார்ப்போமாக. உறுதியான உடல் உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எங்களுக்கு எவ்வளவு வாழ்நாள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதோ அவ்வளவு காலம் வரை அதை அனுபவிப்போமாக. இந்திரதேவர், சூரியதேவர், கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய தேவகுரு பிரகசுபதி எங்களுக்கு நன்மையை வழங்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
மையக்கருத்து
ஓம் என்ற எழுத்து நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒலி வடிவாக மூன்று பகுதிகளும், ஒலி அற்றதாக ஒரு பகுதியும் உள்ளது. ஒலி வடிவான மூன்று பகுதிகள் முறையே காரம், காரம், காரம் அதாவது , , , என்ற மூன்ரெழுத்தின் வடிவேஓம். ஒலியற்ற நான்காவது நிலையே துரீயம் எனப்படும் பரம்பொருள். ஆத்மாவே பிரம்மம். இந்த ஆத்மா நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. ஆத்மா சட உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதைவிஸ்வன் என்ற பெயருடன் விழிப்பு நிலையில் உள்ளது. இது முதல் நிலை. அதே ஆத்மாவானது சூக்கும உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதைதைசசன் என்ற பெயருடன் கனவு நிலையை அடைகிறது. இது ஆத்மாவின் இரண்டாம் பகுதியாகும். அதே ஆத்மா காரண உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதைபிராக்ஞன் என்ற பெயருடன் அறியாமையையும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கிறது. இது மூன்றாம் நிலை. ஆத்மாவின் நான்காம் நிலையின் பெயர்துரீயம் எனப்படும். துரீயம் எனில் நான்காவது என்பர். இந்த துரீயம் அறிவு வடிவமானது. எந்த உடலுடனும் சம்பந்தப்படாதது. ஓங்காரத்தின் ஒலி அற்ற நிலையேதுரீயம். ஆத்மவின் மற்ற மூன்று அம்சங்களான விச்வன், தைசசன், பிராக்ஞன் நிலையற்றதாக உள்ளது. ஆனால் ஆத்மாவின் துரீய அம்சம் நிலையானது.

ஐதரேய உபநிடதம்
பெயர்க் காரணம்
இந்த உபநிடதம்ஐதரேயர் என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால்ஐதரேய உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. ’இதரா எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்குமகிதாசு ஐதரேயர் எனப் பெயராயிற்று. ஐதரேய ஆரண்யகத்தின் ரிஷியும் இவரே.
அமைப்பு
மற்ற உபநிடதங்கள் போல் அல்லாமல் இந்த உபநிடதம் பத்தி பத்தியாக உள்ளது. இதனால் ஆதிசங்கரர் இந்த உபநிடதத்தை மூன்று அத்தியாயங்களாக பிரித்து முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார்.
சிறப்பு
ஆதிசங்கரர் இந்த உபநிடதத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார். ஞான யோகம் மற்றும் சந்நியாசம் குறித்து தனது முகவுரையில் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த உபநிடதத்தில்ப்ரக்ஞானம் பிரம்மம் , ”ஆத்மாவை இதம் எனும் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளன.
சாந்தி மந்திர விளக்கம்
இருக்கு வேதத்தின் சாந்தி மந்திரமே ஐதரேய உபநிடதத்திற்கும் அமைந்துள்ளது. “ஓம் வாங்மே மனஸி எனத் துவங்கி.............அவது மாமவது வக்தா மவது வக்தாரம் என முடியும் சாந்தி மந்திரத்தின் பொருள்:
எனது வாக்கு, மனதில் நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக. என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப் பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும். எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு (வேதத்தை) நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியும் அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
வேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை, இயற்கையிலிருந்து வரும் தடை, நம்மிடருந்து நமக்கே வரும் தடை ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம் காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம சொல்வதின் உட்பொருள்.
மையக்கருத்து
இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.
உடல், உயிர் மனம், பிராணன், ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன்; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு ஆன்மா கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.
பின்பு ஆத்ம தத்துவம் விளக்கப்படுகிறது:
நாம் யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, இனிப்பு-கசப்பு என்று எதை என்று எதை உணர்கின்றோமோ அவரே ஆத்மா. உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகிறது. ஆனால் கதிரவன் எதிலும் நேரிடையாக ஈடுபடுவதில்லை. அவனுடைய முன்னிலையில் தான் எல்லாம் நடைபெறுகிறது. அது போல ஆத்மா என்பது ஒரு சாட்சியே. ஆத்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், எல்லாமாக விளங்குவதும் அதுவே. அந்த ஆத்மாவே புத்தியாகவும், மனமாகவும் விளங்குகிறது. உணர்வு, ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, உறுதியான புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நுகர்ச்சி என்பவை ஆத்மாவின் பல பெயர்கள். உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே.
இறுதியாக பிரக்ஞானம் பிரம்ம என்ற மகா வாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம், அதனை உண்ர்ந்தே வாமதேவர் முக்தி அடைந்தார்.
ஆத்மா, சீவன் இரண்டும் பிரம்மமாக உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களும் ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. பிரபஞ்சமே ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.
சந்தியாவந்தன மந்திரம்
சந்தியாவந்தன மந்திரம் இந்த உபநிடதத்தில் வருகின்றது. ஞாயிற்றை தினமும் போற்றி வழிபடும் கௌஷீதகி முனிவர் பகலில் ஒளிரும் ஞாயிறை, மாலையில் விழும் ஞாயிறைத் தினமும் தோத்திரம் செய்பவர்.[2]
தைத்திரீய உபநிடதம்
சாந்தி மந்திர விளக்கம்
மித்திர தேவர், வருண தேவர், அர்யமா தேவர், இந்திர தேவர், பிரகசுபதி தேவர், நீண்ட கால்களுடைய விட்ணு தேவர் எங்களுக்கு மங்களத்தை கொடுப்பவர்களாக இருக்கட்டும். நேரில் காணக்கூடிய பிரம்மமாகவும், அறிவு வடிவாகவும், சத்ய வடிவாகவும் உள்ள இரண்யகர்ப்பதேவருக்கு எங்கள் வணக்கங்கள் உரித்தாகட்டும். அந்த இரண்யகர்ப்ப தத்துவம் என்னையும் என் குருவையும் காப்பாற்றட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
உபநிடத சாரம்
முதல் வல்லியில்
இருபத்திநான்கு தேவதைகளை தியானம் அல்லது உபாசனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இறைவனை ஓங்காரரூபமாக வர்ணித்து, ஓங்காரத்திடம் வேண்டுதல் விடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான உடல், நல்வாக்கு, ஞாபகசக்தி, குரு பரம்பரை காக்க நல்ல சீடர்கள் வேண்டப்பட்டு இறுதியில் இறைவனுடன் ஒன்றாக கலந்து விடவேண்டும் என்று வேண்டப்படுகிறது. ஓங்கார உபாசனம், சம்ஹிதா உபாசனம், வியாக்கிருதி உபாசனம், இரண்யகர்பர் உபாசனம், பாங்காத்த உபாசனம் விளக்கப்படுகிறது.
இரண்டாவது வல்லியில்
பிரம்மத்தை விளக்குகிறது. எது சத்தியமாகவும், ஞானமாகவும், எல்லையற்றதாகவும் இருக்கிறதோ அதுவே பிரம்மம். அந்த பிரம்மத்தை மனதுக்குள் அறிய வேண்டும். அந்த பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மாகவே இருந்து அனைத்தையும் அடைகிறான். பிரம்மத்தைஅத்யாரோபம் அபவாத நியாயம் தத்துவம் மூலம் விளக்கப்படுகிறது.

பிரபஞ்சமும், சீவராசிகளும் பிரம்மத்திலிருந்து தோண்றியது என்று பிரம்மத்தைக் காட்டி, இப்படைப்பை காரியமாக காட்டுதல்அத்யாரோபம் ஆகும். பிறகு கார்யமான இந்த உலகம் காரணத்திலிருந்து வேறாக இல்லை என்று காரியத்தை நீக்குதல்அபவாதம் ஆகும். ஒரு சீவனின் அனாத்மாவாக இருக்கின்ற உடல் ஐந்து கோசங்களாக பிரிக்க்ப்படுகிறது. அவை 1 அன்னமய கோசம் 2 பிராணமய கோசம் 3 மனோமய கோசம் 4 விஞ்ஞானமய கோசம் 5 ஆனந்தமய கோசம். ஒவ்வொரு கோசத்தை நீக்கும்பொழுது அந்த கோசத்துடன் சேர்ந்து இவ்வுலகமும் நீக்கப்படுகிறது. உதாரணமாக அன்னமய கோசமான இந்த சட உடல் ஆத்மா அல்ல என்று அன்னமய கோசத்தை நீக்கும்பொழுது இந்த சட உலகமும் நீக்கப்படுகிறது. இவ்விதம் ஐந்து கோசஙகளும் நீக்கப்படும் பொழுது அனைத்துப் படைப்புகளும் உண்மையல்ல என்று உணர்த்தப்பட்டு, ஆனந்த வடிவாகவும், ஆத்மவாகவும் உள்ள பிரம்ம தத்துவம் விளக்கப்படுகிறது.

ஈஸ்வரனே மாயையின் துணைகொண்டு இப்படைப்பிற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் விளக்கப்படுகிறது. பிரம்மம் அறியப்படாதபொழுது பயத்திற்கும், அறியப்படும்பொழுது அபயத்திற்கும் இருப்பிடமாகவும் விளங்குகிறது. இறுதியில் ஞானி பிரம்மத்தை அடைகிறான். ஆனால் அஞ்ஞானியோ பிரம்மத்தை அடைவதில்லை. இந்த விசாரணைக்கு ஆனந்த மீமாம்சை என்பர்.
மூன்றாவது வல்லியில்
அன்னதானம் வலியுறுத்தப்பட்டு, உணவை நாம் எவ்விதம் கொடுக்கிறோமோ அவ்விதமே நமக்கும் கிடைக்கிறது என்ற நியதி கூறப்படுகிறது. இறுதியாக சீவ - பிரம்மம ஐக்கியம் கூறி இந்த ஆத்ம ஞானம் அடைந்தவன் ஆனந்தத்தில் களிக்கிறான் என்பதுடன் இந்த உபநிடதம் முடிகிறது.

பிரகதாரண்யக உபநிடதம்
பெயர்க்காரணம்
பிரகதாரண்யகம் எனும் சமற்கிருத சொல்லுக்கு மிகப்பெரிய அடர்ந்த காடு என்று பொருள். பெயருக்கு ஏற்ப இவ்வுபநிடதம் ஆத்மதத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள், சடங்குகள், தியானம், உபாசனை, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள் மற்றும் சீவ - பிரம்ம ஐக்கியத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
பிரகதாரண்யக உபநிடதத்தின் சிறப்பு
இவ்வுபநிடதத்தில் அஹம் பிரம்மாஸ்மி எனும் மகா வாக்கியம் அமைந்துள்ளது. ’நான் பிரம்மாக இருக்கிறேன். (நானே இறைவனாக இருக்கிறேன்) என்ற மெய்ப்பொருள் தத்துவத்தை இந்த உபநிடதம் விளக்குகிறது. இதில்ஆத்ம விசாரணை அதாவது, ஆத்மா தொடர்பான பல இரகசியங்களை சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் என்ற எழுத்திற்கு பலவகையான சிறப்பான தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது.
சாந்தி மந்திர பாடமும் விளக்கமும்
இவ்வுபநிடதம் சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளதால், அதன் சாந்தி மந்திர பாடமே இவ்வுபநிடத்திற்கும் சாந்தி மந்திர பாடமாக அமைந்துள்ளது.
சாந்தி மந்திரம்
பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
தமிழ் விளக்கம்
அந்த ஈச்வரன் பூர்ண சொரூபமானவர், இந்த சீவன் பூர்ண சொரூபமானவன், பூர்ணமான ஈச்வரனிடமிருந்து பூர்ணமான சீவன் தோண்றியுள்ளான். பூர்ணமான சீவனுடைய பூர்ணமான சொரூபத்தை எடுத்துவிட்டால் பூர்ணம் மட்டும் எஞ்சியுள்ளது.(பூர்ணம் என்ற சொல்லுக்கு வரையறுக்கப்படாதது என்பது பொருள்).
காலத்தாலும் இடத்தாலும் குணத்தாலும் வரையறுக்கப்படாததாக உள்ளது. பூர்ணம் என்றும் பிரம்மம் என்றும் கூறப்படுகிறது. ஈச்வரனும் ஜீவனும் உண்மையில் பூர்ணமான தன்மையையுடையவர்களே, வெளித்தோற்றத்தில் வேற்றுமையே தவிர சொரூபத்தில் வேற்றுமை இல்லை. கடலும் அலைகளும் நீர் சொரூபமாக இருப்பது போல், ஈச்வரனும் ஜீவனும் பூர்ண சொரூபமானவர்கள். அதாவது பிரம்ம சொரூபமானவர்கள்.
இறுதியாக மூன்று முறை ஓம்சாந்தி என்று சொல்வதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. அது மனிதர்களுக்கு மூன்று வழிகளிலிருந்து தடைகள் வருகிறது. அவைகள் 1.ஆதிபெளதிகம் (Physical), 2. ஆதிதெய்விகம் (Divine), 3. ஆதிஅத்யாத்மிகம் (Internal) என்பன. ஆதிபெளதிகம் என்பது வெளிச்சூழ்நிலைகளிருந்து, குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடருந்து நமக்கு வரும் தடைகள், ஆதிதெய்விகம் என்பது துர்தேவதைகள், பேய் பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றிடமிருந்து நமக்கு வரும் தடைகள். ஆதிஅத்யாத்மிகம் என்பது நம்மிடருந்தே நமக்கு வரும் தடைகளான, நோய்கள், வலிகள், சோம்பேறித்தனம் மற்றும் ஞாபகமறதி. இது போன்ற தடைகளிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த சாந்தி மந்திரம் மூன்று முறை ஜெபித்தால், எவ்வித தடைகள் இன்றி வேதாந்த சாத்திரங்களை நன்கு கேட்டு நாம் மனதில் இருத்திக் கொள்ள முடியும்.
உபநிடத சாரம்
முதல் காண்டமான மது காண்டம் அல்லது உபதேச காண்டம்
முதல் இரண்டு அத்தியாயங்களில், இறைவன் பற்பல வடிவாக இருப்பினும், இறைவன் ஒருவனே என்று விளக்கப்படுகிறது. ’மெய்ப்பொருளை வெவ்வாறாக பிரித்து உபாசிக்கின்றவன், அவன் அறிய வேண்டியது ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தைத் தான். அது எல்லாவற்றை விட மேலானது.
ஆத்மாவை தியானிப்பவர்கள் அதுவாகவே மாறி விடுகின்றனர். எவன் தன்னை இறைவன் என்று (அஹம் பிரம்மாஸ்மி) அறிகிறானோ, அவனுடைய பெருமையைக் குறைக்க தேவர்களாலும் முடியாது.(இங்கு இறைவனை மெய்ப்பொருள், ஆத்மா, பிரம்மம், பரப்பிரம்மம், பரம்பொருள், பரமாத்மா என்றும் அழைப்பர்). இவ்வாறு இறையறிவு என்ற பிரம்மக் ஞானம் அல்லது ஆத்ம ஞானம் விளக்கப்படுகிறது.
யாக்யவல்கியர் தனது இரண்டு மனைவிகளில் ஒருவரானமைத்திரேயி வேண்டியவாறு, அவருக்குபிரம்ம வித்தை எனும்மெய்ப்பொருளின் தத்துவத்தை உபதேசிக்கிறார். சீவன் இந்த உலகை விட்ட பின் சட உடலில் குடிகொண்டிருந்த சீவாத்மா, பரமாத்மாவிடம் இலயித்த பின்னர், தனியே நிற்கும் உலகமும் இல்லை. நானும் இல்லை. அறிபவனும் (பரமாத்மா) அறியப்படுபவனும் ஜீவாத்மா ஒன்றேயான பிறகு, அறிதல் என்பது ஏது?
பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, வேதாந்த சாத்திரங்களிலும் குருவிடத்திலும் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும் புலனடக்கம், மனவடக்கம், தியாகம், அகிம்சை, பொறுமை, விவேகம், வைராக்கியம், தவம், சாத்திரங்களை கேட்டல், கேட்டதை மனனம் செய்தல் (படித்த சாத்திரங்களை தொடர்ந்து நினைவில் அசைபோடுதல்), பரம்பொருளை அறியும் ஆவல், நிதித்யாசனம், எப்பொழுதும் பரம்பொருளை தியானித்துக் கொண்டு இருத்தல் (முமுச்சுத்துவம்) போன்ற (சாதன சதுஷ்டிய சம்பத்தி) குணங்களைக் கொண்டவர்கள் பிரம்ம நிஷ்டை அடைந்து ஆத்ம ஞானம் பெற்று பிரம்மமாகவே மாறிவிடுவர். மேலும் பிரம்ம தத்துவத்தினை அறிந்து கொண்டதின் பலனாக சீவன் பிரம்மத்தில் ஐக்கியம் அடைவதை இவ்வுபநிடதம் போதிக்கிறது.
இரண்டாவதான முனி காண்டம்
மூன்றாவது முதல் நான்காவது அத்தியாயம் முடிய, மகரிசியான [[யாக்யவல்க்கியர்], ராஜரிசியான சனகரின் அரசவையில் கூடி இருந்த வித்வான்களிடம் பிரம்மத்தைப் பற்றி விவாதித்ததை இந்த அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது. விதேக நாட்டு அரசர் சனகர் வேள்வி செய்து கொண்டு இருந்த போது பல முனிவர்கள் கூடினர்.
சனகர் ஆயிரம் பசுக்களின் கொம்புகளில் பத்துப் பத்து பொற்காசுகளைக் கட்டிவிட்டு, அக்கூட்ட்த்தில் இருந்த முனிவர்களைப் பார்த்து, “பிரம்ம வித்தையில் யார் சிறந்தவரோ அவரே இந்த ஆயிரம் பசுக்களை ஓட்டிச் செல்லலாம்என்று அறிவித்தார். அனைத்து முனிவர்களும் தயங்கிய போது, யாக்யவல்கியர் மட்டும் தனது சீடனை அழைத்து, சனக மன்னரின் அந்த ஆயிரம் யாகப்பசுக்களை ஓட்டிச் செல்ல உத்தரவு இட்டார்.
அப்போது சனக மன்னரின் ராஜகுருவான ஆசுவல ரிசி குறுக்கிட்டு, நமக்குள் நீர் தான் பிரம்ம நிஷ்டரோ என்று கேட்டார். ஆசுவல ரிசி அவரிடம் பிரம்மத்தைப் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு யாக்யவல்கியர், அக்னி என் வாக்கில் உள்ளது, வாக்கு மனதில் உள்ளது, மனம் என்னிடத்தில் உள்ளது, நான் அமுதத்தில் உள்ளேன், அமுதம் பிரம்மத்தில். விசயப்பற்றே மரணம். அதிலிருந்து விடுதலையே முக்தி, என்று ஆசுவல ரிசிக்கு பிரம்மத்தைப் பற்றி விளக்கினார் யாக்யவல்கியர்.
பின் உஷஸ்தர் என்ற சாக்ராயணர், எந்தப் பிரம்மம், தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாகவும், வேறு ஒன்றை வேண்டாததாகவும், அனைத்திலும் நிறைந்து, அனைத்திலும் உறையும் ஆத்மாவாகவும் உள்ளதோ, அதை விளக்கிக்கூறும் என்றார். மேலும் எந்த ஆத்மா அனைத்திலும் உறைவது என்று கேட்டார். அதற்கு யாக்ஞவலகியர்ஒரு காட்சியைக் காண்பவனைக் காணமுடியாது. அறிவை அறிபவனை அறிய முடியாது. இந்த ஆத்மா அனைத்திலும் உறைவது. இதற்கு மாறானதெல்லாம் அழிவுக்கு உட்பட்டவை என்றார். மேலும் உலகின் இன்பமே, துன்பமே ஆத்மாவை பாதிப்பதில்லை. பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் இவையெல்லாம் கடந்து எது இருக்கிறதோ, அதுதான் இந்த ஆத்மா.
கஹோலர் என்ற முனிவரின் கேள்விக்கு, யாக்யவல்க்கியர் கூறிய பதில்: நம்மில் உறையும் இந்த ஆத்மாதான் அனைத்திலும் இலயித்திருக்கிறது. மேலும் ஞானிகளுக்கு கர்மம் இல்லை. கர்ம சாதனமும் இல்லை. இவைகளைத் தாண்டிச் சென்ற ஞானிகள் அடையாளம் இல்லாதவன். ஞானியிடம் காமம், கபடம், குரோதம், விரோதம், பொய் முதலியன கலந்த துர்நடத்தை முதலியவைகள் இருக்காது. அப்படி இருந்தால் அவன் ஞானி அல்ல. தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்த பின், அதனை நீரிலோ, மோரிலோ போட்டு வைத்தாலும்கூட அது எதிலும் ஒட்டாது, கலக்காது. தனியே மிதக்கும். மேலேயே மிதக்கும். அது போலப் ஆத்ம ஞானியின் மனம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களுடன் கலக்காமல், பிரம்மத்தில் மட்டும் நிலைத்து நிற்கும். நம் எல்லோருக்கும் ஒரு சமயம் உள்ளே உறையும் பரம்பொருளின் ஒளி ஒன்றையே நாடிச் செல்லும் மனோநிலை வந்துதான் தீரும். அந்த நிலை வரும் பொழுது அவன் தீரனாகிறான். அவன் ஸ்திரப் பிரக்ஞன் எனும் சலனமற்ற புத்தி உள்ளவனாகிறான்.
இகத்தையும் பரத்தையும், எல்லா உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டி வைக்கும் அந்தர்யாமியை (கண்களுக்கு தெரியாதவரை) பற்றி கூறும் என்று கேட்ட உத்தாலக ஆருணி முனிவருக்கு யாக்யவல்க்கியர் பதில் கூறுகிறார்: ”எவர் பூமியில் இருந்துகொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரைப் பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்குப் பூமி உடலாகிறதோ, எவர் பூமியின் உள் நின்று அதனை ஆள்கிறாறோ, அவர்தான் ஆத்மா. அந்தர்யாமியான அவர் அழிவற்றவர்.
மூன்றாவதானகில காண்டம்
ஐந்தாம் மற்றும் ஆறாவது அத்தியாயத்தில் மனிதர்களிடையே மன அடக்கம், புலனடக்கம் மற்றும் கருணை போதிக்கப்படுகிறது. தவத்தால் அகந்தையை தியாகம் செய்ய வேண்டும். அகந்தையை ஒரு மனிதன் தன்னிடமிருந்து நீக்கா விட்டால் இயற்கை அவனை தவிர்க்க, ”நான்எனது என்ற அவன் போற்றியவைகள் எல்லாம் அவனிடமிருந்து கவர்ந்து கொள்கிறது.
பின்பு பிராண உபாசனையும், பஞ்சாக்னி வித்தையும் விளக்கப்படுகிறது. தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் பிரசாபதியிடம் சென்று என்ற ஒரு எழுத்தையே மந்திர உபதேசமாக பெற்று வந்தனர்.
இந்த மந்திரத்தின் படி தாங்கள் புலனடக்கமற்றவர்களாக இருப்பதாக கருதிய தேவர்கள், பிரசாபதி தங்களைபுலனடக்கத்துடன் இருக்க வேண்டும் உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். தாங்கள் மற்றவர்களை துன்புறுத்தும் இயல்பினராக கருதிய அசுரர்களோ, பிரசாபதி தங்களைதயை உடையவர்களாக இருங்கள் என்று பிரசாபதி உபதேசித்ததாக கருதிக்கொண்டனர். தாங்கள் பேராசையுடையவர்கள் என்று உணர்ந்த கொண்ட மனிதர்களோ, பிரசாபதி தங்களைதானம் செய்யும்படி உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். ஒருவனுக்கு தன் குறை தெரியாத போது, அதனை குறிப்பால் உணர்த்த இயலும் என்பது இக்கதையால் உணர்த்தப்படுகிறது. தேவர்கள் இயற்கையாகவே புலனடக்கமற்றவர்கள் என்றும், அசுரர்கள் பிறரை துன்புறுத்தும் குணம் கொண்டவர்கள் என்றும், மனிதர்கள் மற்றவர்களுக்கு தானம் வழங்காத கருமிகள் என்றும் அவரவர்கள் உணர்ந்திருந்தார்கள்

சாந்தோக்கிய உபநிடதம்
முதல் வாக்கியமே ஒரு மேல்நோக்கு
எல்லா வேதாந்த நூல்களிலும் தொடக்கத்திலுள்ள வாக்கியங்கள் அந்நூலின் முக்கிய உட்கருத்துக்களை அதனுள் அடக்கியிருக்கவேண்டும் என்ற விதிப்படி, இந்நூலும் தொடக்கவாக்கியத்திலேயே அதனுடைய குறிக்கோளைக் காட்டிவிடுகிறது. ஈசாவாஸ்ய உபநிடதத்தின் முதல் வாக்கியம், கேன உபநிடதத்தின் முதல் சில வாக்கியங்கள், பிருகதாரண்யக உபநிடதத்தின் அசுவம் (குதிரை) முதலிய எல்லாமே அந்தந்த உபநிடதத்தின் உட்கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.சாந்தோக்ய உபநிடதத்தில் பல உபாசனைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் முக்கியமானது ஓங்கார உபாசனை. உபாசனை என்றால் தியானத்தின் மூலம் தியானப்பொருளின் தத்துவத்திலேயே நிலைத்திருப்பது.'ஸர்வம் கலு இதம் பிரம்ம', ' தத் த்வம் அஸி' 'ஆத்மா வா இதம் ஸர்வம்' முதலிய மஹாவாக்யங்களே இவ்வுபநிடதத்தின் சாராம்சம். மஹாவாக்கியங்களோ ஓங்காரத்தில் அடங்கியவை. படிப்படியாக ஓங்காரப் பொருளை விளங்க வைப்பதே இவ்வுபநிடதத்தின் முக்கிய நோக்கம்.'உத்கீதம்' எனப் பெயர் பெற்ற 'ஓம்' என்ற ஒற்றையெழுத்துச் சொல்லை உபாசிக்கவேண்டும் என்று தொடங்குகிறது உபநிடதம். ஓம் என்று தொடங்கியே அத்தனை வேதங்களும் கானம் செய்யப்படுகின்றன. பிரம்மத்தின் சின்னம் ஓம். சின்னம் மட்டுமல்ல, சின்னமே பிரம்மம். அதனால் பிரம்மத்தை தியானம் பண்ணுவதற்கு இதுவே வழி. இதுவே முடிவு.
உரைகள்
ஆதிசங்கரருடைய விளக்க உரையே சாந்தோக்ய உபநிடதத்தின் எல்லா உரைகளிலும் முந்தியது.
பிரகதாரண்யமும் சாந்தோக்யமும்
பிரகதாரண்யக உபநிடதம்மும் சாந்தோக்ய உபநிடதமும் இரு மிகப்பெரிய உபநிடதங்கள். இரண்டிற்கும் ஆதிசங்கரரும் இன்னும் மற்ற ஆசாரியர்களும் விரிவாக உரை எழுதியிருக்கின்றனர். இவையிரண்டில் இல்லாத வேதாந்த தத்துவங்கள் வேறு எங்குமே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் இரண்டையும் ஆழமாகப் பார்க்கும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காணலாம். சாந்தோக்யம் இப்பிரபஞ்சத்தில் நம் புலன்களுக்குப் புலனாவதில் தொடங்கி நம்மை பிரும்மத்திற்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கிறது. பிருகதாரண்யகம் நம் புலன்கள் அறியக்கூடியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மத்தை நம்மறிவிற்கு உட்படுத்தமாட்டாமையை விளக்குகிறது. இதனால் சாந்தோக்யத்தை 'ஸப்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் பிரகதாரண்யகத்தை 'நிஷ்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் சொல்வதுண்டு [2].
முதல் அத்தியாயம்
ஓங்காரத்தின் மகிமையை அறிந்து, சிரத்தையுடனும் யோகமுறைப்படியும் செய்யப்படும் உபாசனையே வீரியமுடையதாகும். சூரியனிடம் போற்றப்படும் தெய்வம் எதுவோ அதுவே கண்ணில் ஒளியாயிருப்பது. இதுதான் அக்ஷி வித்தை. (அக்ஷி = கண்). இவ்வுலகிற்குப்புகலிடம் 'ஆகாசம்' (=வெளி). 'ஆகாசம்' என்ற வடமொழிச்சொல்லிற்கு [3] 'எங்கும் விளங்கும் பொருள்' என்று தமிழில் சொல்லலாம். இதனால் 'ஆகாசம்' என்ற தத்துவத்தை 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' விளங்கும் பரம்பொருள் என்றே அறிந்து கொள்ளலாம். இவ்விதம் அறிந்து கொள்வதைத்தான் 'ஆகாச வித்தை' என்பர்.
இதற்குப்பிறகு அத்தியாயத்தின் முடிவில் உஷஸ்தி என்பவருடைய கதை வருகிறது. இவர் கிராமம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, வேறு வழியில்லாமல் கொள்ளைத் தின்றுகொண்டிருந்த யானைக்காரன் ஒருவனிடம் பிச்சை கேட்டார். அவன் தான் தின்றுகொண்டிருந்த கொள்ளையே இவருக்குக் கொடுத்தான். கூடவே தண்ணீரும் கொடுத்தான். கொள்ளை ஏற்றுக்கொண்ட உஷஸ்தி தண்ணீரை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஏனென்றால் அது ஒருவர் சாப்பிட்டமீதம் என்றார். அப்படியென்றால் கொள்ளை மாத்திரம் எப்படி ஏற்றுக்கொண்டீர் என்று கேட்டதற்கு 'அதை உண்ணாவிடில் என் உயிர் நிலைத்திருக்காது; குடி நீரோவெனின் காமமாகும்' என்றார். உயிருக்கு ஆபத்து இருக்கும்போது தன் ஆசாரத்தை மீறுவது தவறாகாது என்பது இதனால் தெரியப்படுத்தப்படுகிறது.
முதல் அத்தியாயத்தின் பொன்மொழிகள்
             அறிவும் அறியாமையும் முற்றும் வேறு. ஆகையால் தத்துவஞானத்துடனும், சிரத்தையுடனும், யோகமுறைப்படியும் எது செய்யப்படுகிறதோ அதுவே மிகுந்த வீரியமுடையதாகும் [4].
இரண்டாவது அத்தியாயம்
இவ்வத்தியாயத்தில் 24 'கண்டங்கள்' (= பாகங்கள்) உள்ளன. அவைகளில் முதல் 22 கண்டங்களில் ஸாமகானத்தை எப்படியெப்படியெல்லாம் தியானம் செய்யலாம், செய்யவேண்டும் என்பதைப்பற்றி விவரமாகச்சொல்லப்பட்டிருக்கின்றன. 23-வது கண்டத்தில் தருமத்தைப்பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துச்சொல்லப்போக, ஆதிசங்கரர் தன்னுடைய பாஷ்யத்தில், இதையே ஒரு தாவுபலகையாகக்கொண்டு, பரம்பொருளுடன் ஒன்றிப்போக துறவறம் இன்றியமையாதது என்ற தன்னுடைய அத்வைதக் கூற்றை நிலைநிறுத்துவதற்காக ஒரு நீண்ட வாதப்பிரதிவாதத்தை தன்னுரையில் சேர்த்திருக்கிறார். 23-வது கண்டத்திலுள்ள மூன்று மந்திரங்களில் சொல்வது:
தருமத்திற்கு மூன்று பிரிவினைகள் உள்ளன. ஒன்று, யஞ்ஞம், சாத்திரப்படிப்பு, தானம் ஆகிய மூன்றும் அடங்கிய இல்லற தருமம்; இரண்டாவது, தவநிலை ஒன்றையே கொண்ட வானப்பிரஸ்த தர்மம்; மூன்றாவது, குருகுலத்தில் புலனடக்கத்துடன் பிரம்மச்சர்யம் வாழ்க்கை வாழும் பிரும்மசரிய தருமம். இவர்கள் எல்லோரும் புண்ணிய உலகங்களுக்குச் செல்வார்கள். பிரம்மத்தில் நிலைபெற்றவன் (பிரம்ம-ஸம்ஸ்தன்) அழியும் அவ்வுலகங்களுக்குச் செல்லாமல் அழியாத ஆன்மநிலையை அடைகிறான்.
இரண்டாவது அத்தியாயத்தின் பொன்மொழிகள்
             இலைகளெல்லாம் நரம்பினால் நன்கு ஊடுருவிப் பரப்பிக்கப் பட்டிருப்பதுபோல் சொற்களெல்லாம் ஓங்காரத்தினால் ஊடுருவி வியாபிக்கப் பட்டிருக்கின்றன [5].
மூன்றாவது அத்தியாயம்
இவ்வத்தியாயத்தில் மது வித்தை, காயத்ரீ மந்திரத்தின் மஹிமை, சாண்டில்ய வித்தை, இரண்யகர்ப தியானம் மனித வாழ்க்கையே ஒரு யக்ஞம் என்ற பார்வை, முதலியன அடங்கும்.
மது என்றால் தேன். தேன் எப்படி களியூட்டுகிறதோ அப்படி சூரியன் எல்லா புலன்களுக்கும், புலன்களின் அதிதேவதைகளான தேவர்களுக்கும் களியூட்டுகிறான். தேவர்கள் இந்த சூரியனாகிற அமிர்தத்தைப் பார்த்தே திருப்தியடைந்துவிடுகின்றனர். இவ்வித்தையை பிரம்மா பிரஜாபதிக்கும், பிரஜாபதி மனுவுக்கும் மனு மற்ற மக்களுக்கும் உபதேசித்தார். இவ்விதம் பரம்பரையாக வந்த பிரம்மஞானத்தை உத்தாலக ஆருணிக்கு அவருடைய தந்தை உபதேசித்தார்.(3-1 இலிருந்து 3-11 வரை).
தோன்றியதாக இங்கு அசைவது அசையாதது எதெதெல்லாம் உண்டோ அது எல்லாம் காயத்ரியே. தோன்றிய இதையெல்லாம் பாடுவதாலும் (காயதி), இதையெல்லாம் பேரிட்டுப்பேசி க்காப்பாற்றுவதாலும் (த்ராயதே ) பேசும் புலனான வாக்கே காயத்ரீ.(3-12-1).
சாண்டில்ய வித்தை
ஸர்வம் கல்விதம் பிரம்ம தஜ்ஜலான் இதி ாந்த உபாஸீத[6]
இது எல்லா உபநிடதங்களிலுமே ஓர் உயர்ந்த புகழ் பெற்ற தத்துவ வாக்கியம். இதன் பொருள்:
இது எல்லாம் (அறிவுக்கு உணவாகும் எல்லாமே) பிரம்மம் என்ற பரம்பொருளே. தத் எனும் பிரம்மத்தினின்று உண்டாகி, அதிலேயே முடிவில் லயித்து இடையில் அதிலேயே உயிர் பெற்றிருப்பதால் இவ்வுலகத்தனையும் பிரம்மமே என்று மன அமைதியுடன் உபாசிக்கவேண்டும்.
தஜ்ஜலான் என்ற சொல்லை ஆதிசங்கரர் ஆராய்ந்து உரை எழுதுகிறார்: தத், , , அன் -- ஆகிய நான்காகப் பிரித்து, தத் என்பது பிரம்மத்தையும், என்பது அதிலிருந்து உலகம் பிறக்கிறது (ஜன்மம் அடைகிறது) என்பதையும், என்பது அதிலேயே உலகம் லயம் அடைகிறது என்பதையும், அன் என்பது, இடையில் அதுவே உலகுக்கு ஆதாரமாக உள்ளது என்பதையும், குறிப்பதாகச் சொல்கிறார்.
சாண்டில்யவித்தையின் வேர்க்கருத்தே இந்த தனிப்பட்ட ஜீவனும் அந்த வானளாவிய பிரம்மமும் ஒன்றே என்ற கருத்துதான். மூன்றாவது அத்தியாயத்தின் 14-வது கண்டத்தில் மீதமுள்ள 2,3,4 -வது மந்திரங்கள் இதைத் தெள்ளத் தெளிவாக்குகின்றன.
மூன்றாவது அத்தியாயத்தின்பொன்மொழிகள்
             காயத்திரி மந்திரத்தின் மஹிமை பெரிது. அதைவிடப்பெரிது உள்ளுறையும் பரம்பொருள். தோன்றி மறையும் உலகெலாம் அவனுடைய ஒரு கால் பங்கு. முக்கால் பங்கு அழிவற்ற ஆன்ம ஜோதியில் அமிர்தமாயுள்ளது. [7]


1 comment:

  1. உபநிடத இயக்கங்கள் என்றால் என்ன

    ReplyDelete