Saturday, April 9, 2016

பிரம புராணம் பகுதி-5



நீளச்செய்ய, அதனைப் பரசுராமர் தன் கைக்கோடாரியால் வெட்ட தந்தப் பகுதி பூமியில் விழுந்தது. கணேசர் மிக்க கோபம் கொண்டார். எனவே தான் கணேசர் ஏகதந்தர் () ஒற்றைக்கொம்பர் ஆனார்.
இவ்வாறு நிகழ்ந்திட விழித்தெழுந்த சிவனும் பார்வதியும் இரத்தம் வழியும் மகன் கணேசனை அருகில் அழைத்து பரசுராமனிடம் கணேசன் பல பரசுராமர்களை வென்று கொல்லும் சக்தி உடையவன். அவன் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஓர் ஈயைக் கூடத் துன்புறுத்தவில்லை. பரசுராமன் கணேசனை மலர், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பூசை செய்தான் என்று விளக்கமளித்தார். கணேசர் பூசையில் துளசி மட்டும் கூடாது. அது ஏன் என்று நாரதர் கேட்க நாராயணன் கூறினார்.
கணேசரும் துளசியும்
ஒரு சமயம் கங்கைக் கரையில் கணேசரைத் சந்தித்த துளசி, கணேசரின் அதிசயத் தோற்றத்தைக் கண்டு, அவரை அணுகித் தான் மன்னன் தர்மத்வஜனின் மகள் என்றும், தன்னை மனைவியாக ஏற்குமாறும் வேண்டினாள். அதற்கு கணேசர் தனக்கு மணம் புரிய எண்ணம் இல்லை என்றும், விவாகம் துயரத்தை உண்டாக்கும் என்றும், மேலும் கங்கை தனக்குத் தாயனையள் என்றும் கூறி மறுத்தார் கணேசர். அப்போது கணேசர் நினைப்பது போல் திருமணமின்றி இருக்க கடவார் என்று சபித்தாள். கணேசரும் துளசியை அரக்கன் கையில் அவள் அகப்படுவாள் என்றும், துளசி ஒரு புதராகுமாறும் சபித்தார். துளசி வருத்தமுற்று கணேசர் கோபத்தைத் தணிக்க கணேசர், பூக்களிலெல்லாம் துளசி தலைசிறந்ததாகவும், விஷ்ணு பூசையில் முக்கியமாகும். ஆனால், என் பூசையில் மட்டும் துளசியை ஏற்பதில்லை என்று கூறினார். இந்தப் புராணத்தை உபன்யாசம் செய்யும் பவுராணிகளுக்குத் தங்கப் பூணூலும், வெண்குடையும், குதிரை, பூமாலை, பழம், இனிப்பு ஆகியவை வழங்கப்படவேண்டும். இத்துடன் கணேச காண்டம் முடிவு பெறுகிறது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம காண்டம்
ஸ்ரீ பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணாவதாரப் பகுதியில் சொல்லப்பட்டவையே இந்த பிரமவை வர்த்த புராணத்தில் இறுதி நான்காவது காண்டமாக ஸ்ரீகிருஷ்ண ஜன்ம காண்டத்தில் கூறப்படுகிறது. (விரிவை பாகவதம், விஷ்ணு புராணங்களில் ஸ்ரீகிருஷ்ணாவதாரப் பகுதியில் காண்க)
(அவற்றில் கூறப்படா சில முக்கிய செய்திகள் மட்டும் இங்கு தரப்படுள்ளன.) இதில் கிருஷ்ணன் ராதை வரலாறு விசேஷமாகக் கூறப்படுகிறது.
வரலாறு
கோலோகத்தில் ஸ்ரீதாமன் ராதையை ஒரு யாதவப் பெண்ணாகப் (இடையன் மகளாக) பிறக்குமாறு சபிக்க, அவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிவது குறித்து மிகவும் வருத்தமுற்றாள். இந்நிலையில் உலகில் துஷ்டசம்ஹாரம் சிஷ்டபரிபாலனம் செய்ய, பூமாதேவியின் வேண்டுகோளின்படி கிருஷ்ணன் புவியில் பிறக்கின்றான். இங்கு மாயை குழந்தை வடிவில் வந்து அசரீரியின் கூற்று இதில் மாறுபட்டுள்ளது.
அசரீரி
முட்டாள் கம்சா, ஏன் அனாவசியமாய் என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்பவன் வேறிடத்தில் வளர்கிறான். உரிய காலத்தில் தன்னை வெளிப்படுத்துவான் இதனால் அப்பெண் குழந்தையைக் கொல்லாமல் தேவகியிடம் கொடுத்து விடுகிறான் கம்சன். அந்தப் பெண் குழந்தை பெரியவளானவுடன் ஏகநம்ஷா என்ற பெயரில் துர்வாச முனிவருக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.
முற்பிறவி
நந்தன் ஒரு வசு, துரோணர் என்று பெயர் கொண்டவன். அவன் மனைவி யசோதை. துரோணரின் மனைவி தாரை. அவர்கள் வேண்டுகோளின்படி கோகுலத்தில் அவர்கள் மகனாகக் கிருஷ்ணன் வளர்கிறான். புவியில் காசியப முனிவர் வாசுதேவனாகவும், அதிதி தேவகியாகவும், கத்ரு ரோஹிணியாகவும் தோன்றினர்.
பூதனை
கம்சனின் சகோதரி பூதனை. கிருஷ்ணனெனும் மாயக்குழந்தையை விஷம் ஊட்டிக் கொல்லச் சென்று கிருஷ்ணனால் கொல்லப்பட்டாள். பூதனை முற்பிறவியில் அசுரமன்னன் பவியின் புதல்வி ரத்னமாலா. ஒரு யாகத்தில் விஷ்ணு வாமனனாகத் தோன்ற அவள் அவனைக் குழந்தையாக்கிப் பாலுட்ட வேண்டுமென்று விரும்பினாள். அதுவே பூதனை வரலாறு.
அரக்கர்கள் முற்பிறவி
கிருஷ்ணனால் கொல்லப்பட்ட திருணாவர்த்தன் என்னும் அரக்கன் முற்பிறவியில் மன்னன் சகஸ்ராக்ஷன் என்ற பாண்டிய குலத்தவன்.
கிருஷ்ணர்
கார்க்க முனிவர் நந்தன் குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார். கிருஷ்ணன் என்றால் கருப்பு நிறம் உடையவன் என்று பொருள். ஆனால் இப்புராணத்தில் கிருஷ=மோக்ஷம், =மிக உயர்ந்த()சிறந்த எனவே கிருஷ்ணன் என்றால் மிக உயர்ந்த மோக்ஷம் அளிப்பவன் என்று பொருள் தரப்படுகிறது. பாலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு.
தாமோதரன்
கிருஷ்ணன் யசோதை உரலில் கயிறு கொண்டு கட்டியதாகக் கூறுவது வழக்கம். (தாம=கயிறு; உதரன்=வயிறு உடையவன்)-கயிறு கட்டிய அடையாளம் காரணமாக தாமோதரன் என்று கிருஷ்ணனுக்குப் பெயர். ஆனால் இப்புராணத்தில் கிருஷ்ணனை நீண்ட துணியால் கட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், மரங்களுடன் கட்டியதாகக் கூறுகிறது இப்புராணம்.
கோபி ராதை
ஒரு நாள் கிருஷ்ணனுடன் மாடுகளை ஓட்டிச் சென்ற நந்தன் கிருஷ்ணனை அங்குக் காணப்பட்ட ஒரு பெண்ணின் காவலில் விட்டு விட்டுச் செல்ல, அந்தப் பெண் ராதையும், கிருஷ்ணனும் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணனைக் காணாமல் வருந்திய ராதையிடம் கிருஷ்ணன் தினமும் இரவில் பிருந்தாவனம் வந்து மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் நிழல் மட்டும் வீட்டில் இருந்தது. பார்வதி தவம் செய்து கொண்டிருந்தாள். அன்றாட பூசைக்கு அவள் அருகிலிருந்து சித்திரா என்னும் ஏரியில் பூக்கும் மலர்களைப் பறித்துப் பூசைக்கு உபயோகித்து வந்தாள். அந்த மலர்கள் அவளுக்காக ஏற்பட்டவை. அவற்றை வேறு யாராவது பறித்தால் அரக்கர்களாவர் என்று சாபம் உண்டு. இதை அறியாத கந்தர்வர்கள், அம்மலர்களைப் பறித்தனர். அவர்கள் விஷ்ணு பக்தர்கள். அவர்களே பகாசுரன், பிரலம்பாசுரன், கேசி என்ற அரக்கர்களாகி கிருஷ்ணனால் மடிந்தனர். பார்வதி செய்த அந்த விரதம் ராதாகிருஷ்ணன் ஆகியோரை முன்னிட்டே இவ்விரதம் செய்யும் பெண்மணியின் கணவன் சகல வளங்களையும் பெறுவான்.
பிருந்தாவனம்
கோபர்கள் சண்டிகாதேவியை ஓர் ஆலமரத்தின் அடியில் பூசை செய்து விட்டு உறக்கத்தில் வீழ்ந்தனர். அந்த இரவில் தேவ கலைஞன் விசுவகர்மா பிருந்தாவனத்தில் தேவையான வீடுகளை நிர்மாணம் செய்து அதில் ஒவ்வொரு கோபன் பெயரும் எழுதிவிட காலையில் எழுந்த கோபர்கள் அவரவர் பெயர் கொண்ட வீட்டில் புகுந்தனர் பிருந்தாவனத்தில். சுவயம்புவ மனுவின் குலத்தோன்றல் மன்னன் கேதாரன். அவன் மகள் விருந்தை () பிருந்தை. எனவே, அவ்விடம் பிருந்தாவனம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு ஒரு வரலாறு இருக்க பிரம வைவர்த்த புராணம் பிருந்தாவனம் ஏற்பட்ட வரலாற்றை வேறு விதமாகக் கூறுகிறது. ராதையின் பல பெயர்களில் ஒன்று பிருந்தை. அவளும் கிருஷ்ணனும் ஆடிப்பாடி மகிழ்ந்த இடம் என்பதால் பிருந்தாவனம் என்று ஆயிற்று.
அந்தண ஸ்திரீகள்
அந்தணர்கள் பத்தினிகள் ஒரு சமயம் கிருஷ்ணனும் அவர் தோழர்களும் பிராமணர்களிடம் சென்று உணவு கேட்க அவர்கள் இடவில்லை. அடுத்து கிருஷ்ணன் ஆணைப்படி கோபர்கள் அந்தணர் தன் மனைவியரிடம் வேண்ட அவர்கள் கிருஷ்ணன் இருக்குமிடத்துக்கு உணவுப்பொருள்களுடன் வந்து அவர்களின் பசி தீர்த்தார்கள். அவர்கள் கிருஷ்ணனிடம் அவர் தரிசனத்திலேயே அவர்கள் எப்போதும் இருக்கும் வரம் வேண்டினர். விண்ணிலிருந்து ஒரு விமானம் வர அப்பெண்டிர் அனைவரும் கோலோகம் சென்று ஆனந்தமடைந்தனர். அவர்களுடைய நிழல்களே அந்தணர்களின் இல்லத்தை அடைந்தன.
காளீய மர்த்தனம்
விஷப்பாம்பின் பெயர் காளியன். தன் மனைவியுடன் மடுவில் வசிக்க நீர் விஷமாகி ஆடுமாடுகள் மரணமடைய அவற்றை ஒழிக்க கிருஷ்ணன் காளியன் மடுவில் குதித்தான். காளியன் கிருஷ்ணனை விழுங்கினான். அதனால் உட்புறம் எரிய ஆரம்பிக்க கிருஷ்ணனை கக்கினான் காளியன். காளியன் படம் மீது ஏறி மிதிக்க பளு தாங்காமல் காளியன் விஷம் கக்கி மயங்கினான்.  காளியன் மனைவி சுரசை கிருஷ்ணனைப் பிரார்த்திக்க, ஒரு விமானம் வந்தது. அதில் சுரசை கோலோகம் சென்றடைந்தாள். ஆனால் அவள் நிழலைக் காளியன் பெற்று அந்த மடுவை விட்டு நீங்கி ரமணகம் என்னும் இடம் சென்றான்.
கோவர்த்தன்
கோவர்த்தனம் (கோ=பசு; வர்த்தனம்=செழிப்புடன் வளர்தல்). கோவர்த்தனத்தை சுண்டு விரலால் தூக்கினான் என்பதை இதில் இடது கையால் தூக்கினான் என்று கூறப்பட்டுள்ளது. இந்திரன் கோவர்த்தன கிரியை உடைக்க வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தினான்.
உஷை
தேனுகாசுரன் என்னும் அசுரனின் முற்பிறவி. பலிச்சக்கரவர்த்தியின் மகன் சஹசிகன். கந்தமாதனபர்வத்தில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சஹசிகன் திலோத்தமையுடன் வந்தான். அவர்கள் முனிவரைக் கவனிக்காமல் கேளிக்கையில் ஈடுபட முனிவர் தவத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. துர்வாசர் சஹசிகன் மறுபிறவியில் கழுதையாகப் பிறந்து கிருஷ்ணனால் கொல்லப்படுவான் என்று சபித்தான். திலோத்தமையை பாணாசுரன் மகளாய்ப் பிறந்து கிருஷ்ணனின் பேரன் அநிருத்தனை மணப்பாள் என்றார்.
துர்வாசர் தோல்வி
சஹசிகன், திலோத்தமையால் தவம் பங்கப்பட்ட துர்வாசர், திரிந்து கொண்டிருந்தபோது அவுரவ முனிவர் மகள் கந்தவியைக் கண்டு அவளை மணக்க விரும்பினார். அவள் சண்டைக்காரி என்று அவுரவர் கூற துர்வாசர் அவளுடைய நூறு திட்டுகளை மன்னிப்பதாகக் கூறி அவளை மணந்தார். அவுரவ முனிவர் அவளுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். ஒருமுறை நூற்றுக்கு மேல் திட்டிட துர்வாசர் அவளைச் சாம்பலாகுமாறு சபித்தார். பின்னர் வருத்தம் கொண்ட அவரைக் கிருஷ்ணன் சிறுபையன் வடிவில் வந்து சமாதானப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட அவுரவ முனிவர் துர்வாசர் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்று சபித்தார்.
அம்பரீஷனிடம் கோபம் கொண்டு துர்வாசன் ஒரு வீரனை வாளுடன் தோற்றுவித்து அம்பரீஷனைத் தண்டிக்க முயல சுதர்சன சக்கரம் தோன்றி வீரன் கழுத்தை வெட்டிக் கொன்றது. பின்னர் துர்வாசரைத் துரத்த அவர் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரிடம் உதவியை நாடப்பலனின்றி மறுபடியும் அம்பரீஷரையே அடைந்து  மன்னிக்குமாறு வேண்டிட, சக்கரம் சாந்தி அடைந்தது. அது முதல் துர்வாசர் விஷ்ணு பக்தர்களிடம் கோபம் கொண்டு சபிக்காமல் இருந்தார். கோபியர்களின் ஆடையைக் கவர்ந்து கதம்ப மரத்தின் மீதமர்ந்த கிருஷ்ணனை யமுனையில் நீராடிக் கொண்டிருந்த கோபியர் ஆடைகளைத் தருமாறு வேண்டிட, கிருஷ்ணனை ராதை நீரிலேயே அமர்ந்து தியானித்து அவன் புகழ் பாடிட ஆடைகளைக் கோபியர் பெற்றனர். கிருஷ்ணனின் சிறப்பான சக்திகளை உணர்ந்து கோபியர் இல்லம் அடைந்தனர். ராஜலீலையின் போது கிருஷ்ணன் ராதையுடன் என்றும் சுற்றித்திரிந்து கடைசியில் மலய மலையை அடைந்து ஆங்கோர் ஆலமரத்து அடியில் கேதகிப் புதர்கள் அருகில் அமர, கிருஷ்ணன் ராதைக்குப் பல கதைகள் கூறலானான்.
அஷ்டவக்கிரர்
மேற்கூறியவாறு ராதையும், கிருஷ்ணனும் அமர்ந்திருந்த போது அங்கு அஷ்டவக்கிர முனிவர் வர, அவரைக் கண்டு ராதை சிரிக்க கிருஷ்ணர் அவளைச் சிரிக்காமல் தடுத்தார். பின்னர் அம்முனிவரின் முற்பிறவி வரலாற்றைக் கூறினார். முற்பிறவியில் தேவலன் என்ற அந்தணனாகப் பிறந்து மனைவியுடன் வாழ்ந்த அவர், பிறகு எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த நிலையில் தேவலோக ரம்பை அவரைக் கண்டு தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்ட, அவர் மறுத்தார். அப்போது அவள் வக்கிர புத்தி படைத்த அம்முனிவர் உடலும் வக்கிரமாகுமாறும், அவர் அதுவரையில் பெற்ற புண்ணியமும் இழக்குமாறும் சபித்தாள். அதுகேட்ட அந்தணர் தீக்குளிக்க முற்பட்டபோது கிருஷ்ணன் தோன்றித் தடுத்து அவருக்கு அஷ்டவக்கிரன் என்று பெயர் சூட்டினார். பின்னர், நெடுங்காலம் தவம் இயற்றி வந்த அவர், ராதையையும், கிருஷ்ணனையும் கண்டதும், அவர்களை வணங்கித் துதித்திட அவர் சாபம் நீங்கியது.
பிரம்மன் மோகினி
மோகினி என்ற அப்சரஸ் பிரம்மனை மணக்க விரும்ப, அவர் வெறுக்க, அவள் இனி பிரம்மாவைத் துதிப்பதை யாவரும் நிறுத்தி விடுமாறு சபித்தாள். பிரம்மன் நாராயணனிடம் முறையிடச் சென்றார். அங்கு நான்கு முகங்கள் கொண்ட பிரமன், பத்துத் தலைகள், நூறு தலைகள், ஆயிரம் தலைகள் கொண்ட பிரம்மன்களைக் கண்டு குழப்பமுற்று அது குறித்து நாராயணனைக் கேட்க அவர், இப்பேரண்டத்தில் உள்ள பல உலகங்களில் பல பிரம்மாக்கள் உள்ளனர் என்றார். அதுகேட்ட பிரம்மாவின் அகம்பாவம் நீங்கியது. பிரம்மன் புனிதகங்கையில் நீராடினால் மோகினியின் சாபம் நீங்கிவிடும் என நாராயணன் அருளினார். அதனால் பிரம்மா அகம்பாவம் நீங்கிப் பணிந்தார்.
சிவன் பணிவடைதல்
ஒரு சமயம் சிவபெருமான் விருகாசுரனுக்கு அவன் யார் தலைமீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பல் ஆவர் என அவன் வேண்டியவாறு வரம் தர அவன் சிவன் தலைமீது கைவைத்துப் பார்க்க வர, அவர் விஷ்ணுவிடம் சரணடைந்தார். அங்கு வந்த விருகாசுரனிடம் விஷ்ணு இந்தப் பொய் கூறும் சிவனை எப்படி நம்புகிறாய். அவர் உனக்கு வரம் தரவே இல்லை. வேண்டுமானால் உன் தலை மீது கை வைத்துச் சோதித்துப் பார் என, அவன் தன் தலைமீது கையை வைக்க எரிந்து போனான். இதனால் மனம் போனபடி வரம் அளித்து வந்த சிவன் பணிவு கொண்டார்.
இந்திரன் கர்வத்தை அடக்குதல்
ஒருசமயம் இந்திரன் கர்வமடைந்து பிரகிருதி தேவியை உதாசீனப்படுத்த அதனால் சாபம் பெற்று இந்திரயோகம், லோகம் அனைத்தையும் இழந்தான். பின்னர் விசுவகர்மாவைக் கொண்டு அமராவதி நகரை புதுப்பித்தபோது திருப்தி அடையாத அவன் மேலும் மேலும் அப்பணியிலேயே விசுவகர்மாவை ஈடுபடுத்த விசுவகர்மா வேறெந்தப் பணியிலும் ஈடுபட முடியாமல் பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் அவனை விஷ்ணுவவிடம் அழைத்துச் சென்று விவரிக்க, விஷ்ணு சிறுபாலன் வடிவம் கொண்டு இந்திரன் முன் தோன்றினார். இந்திரனை நோக்கி அந்த பாலன் எத்தனை அழகிய நகரம் இது! வேறெந்த விசுவகர்மாவும் இத்தனை சிறப்பாக அமைக்கமாட்டான். இன்னும் எத்தனை காலம் விசுவகர்மாவை வேலை வாங்கப் போகிறாய்? என்று இளைஞன் கேட்டான். இதனால் கோபம் கொண்டு இந்திரன் இளைஞனிடம், உனக்கு எத்தனை இந்திரன்களைத் தெரியும்? எத்தனை விசுவகர்மாக்களை அறிவாய்? என்று கோபத்துடன் கேட்டான்.
மணல் துளிபோல் எண்ணற்ற இந்திரன்கள் உள்ளனர். பேரண்டத்தில் உள்ள ஒவ்வோர் உலகத்திலும் ஒவ்வோர் இந்திரன். ஒரு இந்திரனின் ஆயுள்காலம் எழுபத்தோர் யுகங்கள். பிரம்மனின் ஒரு நாள் காலத்தில் இருபத்தெட்டு இந்திரர்கள் தோன்றி மறைந்தனர். (அவ்வமயம் சாரை சாரையாக ஓர் எறும்பு வரிசை காணப்பட்டது. பையன் அந்த வரிசையைக் காட்டி சிரித்துக் கொண்டே சொன்னான்.) இவற்றை நானே படைத்தேன். இவை ஒவ்வொன்றும் முற்பிறவியில் ஒரு இந்திரன். ஆனால் இப்போது எறும்புகளாய் பிறந்திருக்கின்றன என்றான். இந்திரன் வெட்கமடைந்து தன்னுடைய பொய் கர்வத்தை விட்டு விசுவகர்மாவைப் போகவிட்டான்.
அக்னி பணிதல்
ஒரு சமயம் அக்னி மூவுலகையும் எரிக்க முற்பட்டது. அதுசமயம் விஷ்ணு ஒரு சிறுவன் வடிவில் அக்னி முன் தோன்றி ஒரு நாணலைக் கொடுத்து எரிக்குமாறு கேட்டது. அப்போது அக்னி தன் சுவாலைகளால் சிறுவனை சூழ்ந்து கொண்டது. ஆனால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. நாணலும் எரிக்கப்படவில்லை. இவ்விதம் விஷ்ணு அக்னியின் கர்வத்தை அழித்தார். (அடுத்து இராமாயணம் பற்றியும் இப்புராணம் கூறுகிறது. அது எல்லோர்க்கும் தெரிந்ததாகையால் இங்கு கொடுக்கப்படவில்லை).
கம்சன், ராதை கண்ட கனவு
கம்சன் இரவினில் மிகவும் பயங்கரமான கனவுகள் கண்டு மனம் கலங்கி புரோகிதர் சாக்கியரை அழைத்துக் கூறிட அவர் ஒரு யாகம் செய்து அதில் சிவதனுசைப் பூசிக்க வேண்டும் என்றும் நடுவில் வில் உடைந்துவிட்டால் கம்சனுக்கு மரணம் நிச்சயம். அதை முன்னிட்டு கிருஷ்ணனை மதுரைக்கு வருவித்துக் கொன்று விடலாம் என்றும் கூறினான்.
ராதையை விட்டுப் பிரிதல்
கிருஷ்ணனை அழைத்து வர அக்ரூரரைக் கம்சன் அனுப்பினான். ராதையும் சந்திரன் விழுவது போலவும் உலகமே இருளில் மூழ்கி விட்டதாகவும் கனவு கண்டாள். அப்போது கிருஷ்ணன் ராதையைச் சமாதானப்படுத்தி கோலோகத்தில் ஸ்ரீதாமன் கொடுத்த சாபம் பற்றி நினைவூட்டி தானும் அவளும் நூறாண்டு காலம் பிரிந்திருந்து பின்னர் இணைவோம் என்றும் கூறினார். பின்னர் ராதையைச் சமாதானப்படுத்தி நந்தன், யசோதை இருவருக்கும், பிரிவு கூறி பலராமனுடன் மதுரைக்குப் புறப்பட்டான் கிருஷ்ணன். மதுரை செல்லும் வழியில் எதிர்ப்பட்ட கூனியை ஓர் அழகியாக மாற்றி, அவளுக்கு அவள் முற்பிறவியில் சூர்ப்பணகை என்பதை நினைவூட்டினார்.
அவர் ஆசனத்தின் மீதேறி சுதர்சனச் சக்கரத்தால் கம்சன் தலையை வெட்டினார். மதுரைக்கு வந்த நந்தனிடம் தன்னை அவர்கள் மகனாக நினைப்பதை மறக்குமாறு கூறினார். மேலும், ராதை உண்மையில் கோபி அல்ல. அவளைத் தோற்றுவித்து நானே என்றும் கூறினார். அவள் பிரகிருதி தேவி. நானே விஷ்ணு, பிரம்மா, சிவன், சூரியன், அக்கினி, வாயு என்றும் எல்லாவற்றிலும் நானே உள்ளேன், என்னில் அனைத்தும் குடிகொண்டுள்ளன. நானே பரமாத்மா, நானே பரப்பிரம்மம் என்றார். மேலும் அன்றாடச் சடங்குகள், சகுனங்கள், கனவுகள், தானதருமம், கிரகணங்கள் பலவகை மக்களின் கடமைகள் நல்லொழுக்க விவரங்கள் ஆகியவற்றைப் பற்றியும் விவரித்தார்.
உத்தவர் தூது
மதுரையில் தங்கி இருக்கும்போது உத்தவரைக் கிருஷ்ணன் பிருந்தாவனத்துக்கு தூது அனுப்பினார். அங்கு சென்ற உத்தவர் ராதை மிகவும் மெலிந்து சோகமே உருவாகக் காட்சி அளித்தாள். பட்டாடை, ஆபரணங்கள் இன்றி எளிமையாகக் காணப்பட்டாள். ஆனால், உத்தவரைக் கண்டு அவரிடம் கிருஷ்ணனைப் பற்றிய செய்திகள் கேட்டு மகிழ்ச்சியுற்று அவருக்கு அளவில்லாப் பரிசுகள் அளித்தாள். மதுரை திரும்பி வந்ததும் உத்தவர், தான் ராதையிடம் கிருஷ்ணர் பிருந்தாவனம் வந்து ராதையைச் சந்திப்பார் என்று கூறினேன். இவ்வாறு கிருஷ்ணன் அவர்கள் தூங்கும் போது கனவில் ஒரு நாடகம் நடத்தினார். ஆனால், விதிவேறு மாதிரி இருந்தது. கிருஷ்ணனும், பலராமரும், சந்தீப முனிவரிடம் கல்வி கற்க அடைந்தனர். அங்கு கோபர் வடிவில் குருகுலவாசம் செய்து பின்னர் மதுரைக்கு ராஜஉடையில் வந்தார். அடுத்து துவாரகை நகரை உருவாக்கி, குரு÷க்ஷத்திரப் போரில் கவுரவர்களுக்கு எதிராக பாண்டவர்களுக்கு உதவி செய்தார். (மகாபாரதம் எல்லோரும் அறிந்த கதைதானே.)
ராதா கிருஷ்ணன் இணைதல்
சித்தாஸ்ரமம் சென்று கிருஷ்ணனும் ராதையும் கணேசரை வழிபட்டனர். அப்போது அங்கு பார்வதி வந்து ஸ்ரீதாமன் சாபம் முடிந்தது. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்றாள். பிரபாச தீர்த்தத்தில் இணைந்ததாக வேறோர் இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ராதை கோகுலம் அடைய கிருஷ்ணன் கோகுலத்தினர்க்குப் பழக்கமான உடையில் ராதையிடம் வந்து சேர்ந்தார். ராதை மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைச் சேர்ந்திட கோகுலவாசிகள் கிருஷ்ணனை மலர்மாலைகள், தாம்பூலம், தேன், பட்டாடைகளுடன் மகிழ்ச்சி கொண்டு வரவேற்றனர். கோலோகத்திலிருந்து வந்த தேவலோகத் தேரில் ஏறி ராதையும் கிருஷ்ணனும் பிருந்தாவனம் அடைந்தனர். கிருஷ்ணன் குழலூதும் நந்தகோபாலன் சிறுவனாகக் காட்சி அளித்தார். ஓர் ஆலமரத்தடியிலிருந்து கிருஷ்ணன் கோகுலவாசிகள் அனைவரிடமும் பிரம்மன் முதல் புல்வரையில் எல்லாமே மாயைதான் என்று கூறி, வரப்போகும் கலியுகத்தின் கொடுமைகளை விவரித்து எல்லோரையும் கோலோகம் செல்லச் செய்தார். மறுபடியும் ராதை தேவியாகி பொன்மய ஆசனத்தில் பெண்டிர் புடை சூழ வீற்றிருந்தார். கிருஷ்ணன் 100 ஆண்டுகள் மதுரையிலும் துவாரகையிலும், நந்தன் வீட்டில் 11 ஆண்டுகளும், ராதையுடன் பிருந்தாவனத்தில் 14 ஆண்டுகளும் (125) இருந்தார். பாகவதத்தில் கிருஷ்ணன் வேடனால் அம்பெய்யப்பட்டு உடலை விட்டு வைகுந்தம் சேர்ந்து அவதாரத்தை முடித்தார் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்புராணம் அவர் முடிவை வேறுவிதமாக வருணிக்கிறது. அவதார முடிவில் லக்ஷ்மி துவாரகையை விட்டு அகன்றார். நிலம் நடுங்கிற்று. யாதவர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு மடிந்தனர். ஜரா என்ற வேடம் தவறாக அம்பெய்தான். அம்பினால் அடிப்பட்ட கிருஷ்ணனைக் காண பிரம்மாவும், தேவர்களும் வந்தனர். எல்லோரையும் சமாதானப்படுத்தினார் கிருஷ்ணன். வேடன் ஜராவை கோலோகம் அனுப்பினார். பலராமர் உடல் சேஷநாகத்துடன் இணைந்து வாசுதேவர் காசியபரிலும், தேவகி அவர் மனைவி அதிதி உடலிலும் கூடினர். துவாரகை கடலில் மூழ்கியது. கிருஷ்ணன் உடலிலிருந்து ஓர் உருவம் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருடன் தோன்றி விமானத்திலிருந்து இறங்கி க்ஷீரோதத்தை (பாற்கடலை) அடைந்தது. இவ்வாறு இடதுபுறத்தில் இருந்த ஓருருவம் பிரிய, வலதுபுறத்திலிருந்து யாதவச் சிறுவன் கோபாலன் () கோபபாலகன் உரு வெளிப்பட்டது. இது நிகழ்ந்தது ஸ்வேதத் வீபத்தில்.
நான்கு கரங்கள் கொண்ட நாராயணன் வைகுந்தம் அடைந்தார். கோபாலன் குழலூதிக் கொண்டே கோலோகம் அடைந்தான். எல்லோரும் ஹரி ஹரி என்று ஹரி நாமஸ்மரணம் செய்தனர். கோலோகத்தில் கிருஷ்ணன் ராதையுடன் ரத்தின மய ஆசனத்தில் அமர அங்கு ராதா நாதா, ராதேசா என்று கோஷம் கேட்டது.
நாராயணனும் நாரதனும்
நாரதன் அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியுற்று இனி இமயத்தில் தவம் செய்யச் செல்லலாமா? என்று கேட்க, நாராயணன் நாரதன் கந்தர்வனாக இருந்த போது மணந்த ஐம்பது மனைவியர்களுள் ஒருத்தி சிவனருள் பெற்று மன்னன் சிரிஞ்ஜயன் மகளாகப் பிறந்து நாரதனுக்காகக் காத்திருப்பதாகக் கூறி அவளை மணப்பது அவன் கடமை என்றார். அவ்வாறே அவளை மணந்து நாரதன் பகவானை மறந்துவிட்டான். அப்போது அந்தப் பற்றிலிருந்து நாரதனை சனத்குமாரன் விழித்தெழச் செய்து கிருஷ்ணநாமம் ஜபித்துக் கொண்டே திரியுமாறு கூறினார். பலகாலம் கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்து கொண்டே நாரதன் நாராயணனுடன் இணைந்தான்.
பிரம வைவர்த்த புராணம் முற்றும்.

No comments:

Post a Comment