Saturday, April 9, 2016

காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள்




முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர். கே. முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு, அக்டோபர் 26, 1933 - செப்டம்பர் 24, 2007) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர். காயத்திரி சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். நுவரெலியா நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவை.
முருகேசு சுவாமிகள் 1933ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் இலங்கையின் மத்திய மாகாணத்தின், கண்டி மாநகரில் இராமன் காளிமுத்து - சந்தனம்மா தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததனால், தமது இளம் பிராயத்திலேயே பல்வேறு கூலி வேலைகளுக்கும் செல்ல நேர்ந்தது. அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலேயே சுவாமிகளுக்கு ஓர் மகாத்மா காட்சியளித்து, கணபதி மந்திரங்கள் அடங்கிய நூல் ஒன்றினையும் வழங்கினார். அன்றுமுதல் சுவாமிகள் தினமும் அந்த மந்திரங்களை செபிக்க ஆரம்பித்தார்.
சுவாமிகள் பின்னாளில் இந்தியாவிற்கு சென்று பண்டிதர் கண்ணையா யோகி மகரிஷிகளை தமது சற்குருவாக ஏற்று ஆத்மஞானத்தினை பயின்றார். சுவாமிகள் தமது குருவின் கட்டளைப்படி காயத்திரி மந்திரத்தினை கற்று, ஆராய்ந்து, அறிந்து பாண்டித்தியம் பெற்றதனால், காயத்திரி சித்தர் என அழைக்கப்படலானார். அத்துடன் தமது ஆராய்ச்சியின் முடிவுகளை பல நூல்களில் எழுதியுமுள்ளார்.
சுவாமிகள் இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காடுகள், மலைகள், குகைகளில் பல சித்தர்கள், முனிவர்கள், மஹரிஷிகளை கண்டு வணங்கி அவர்களிடமிருந்து பல்வேறு சித்திகளையும் கைவரப் பெற்றார். பின் தன் தாயகம் திரும்பி, ஆன்மீகப் பணிகளை தொடர்ந்தார். அவற்றுள் சுவாமிகளால் நிறுவப்பட்ட நுவரெலியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காயத்திரி பீடம் என்பன முக்கியமானவை. அது மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள், ஆச்சிரமங்கள், காயத்திரி பீடங்கள் என பலவற்றையும் நிறுவியுள்ளார். இவற்றுள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சப்தரிஷி மண்டபம் பிரசித்தமானது.
நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில் சுவாமிகளின் ஜீவசமாதி அமைய பெற்றுள்ளது. அங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment