Friday, April 8, 2016

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்




நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இத்தலத்தின் மூலவர் திருமூலநாதர், தாயார் உமையாம்பிகை (சமஸ்கிருதம்:சிவகாமசுந்தரி). இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சேர, சோழ பாண்டிய, பல்லவ, விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும்.
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர்.

வடிவமைப்பு

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து  (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.
இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.
இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர் சந்நிதிகள் இக் கோயிலில் அமைந்துள்ளன.
சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரே கூறினார் என தொன்மமொன்று உள்ளது.
நவகிரக சந்நிதிகள்
பதஞ்சலி சன்னதி -
கம்பத்து இளையனார் சந்நதி -
சிதம்பரம் நடராசர் கோவிலில், கோவிலுக்குள் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன.
சிவகாமசுந்தரி அம்மன் கோவில் - மூன்றாவது பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் சிவகாமசுந்ததரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இச்சந்நதி அருகே யமன் மற்றும் சித்திரகுப்தனுக்கு சிலைகள் அமைந்துள்ளன.
கோவிந்த ராஜபெருமாள் கோவில் -
பாண்டிய நாயகர் கோவில் - சிவகாம சுந்தரி கோவிலின் வடக்கே, பாண்டிய நாயகர் கோவில் அமைந்துள்ளது. இது முருகன் கோவிலாகும். இக்கோவிலில் ஆறுமுகம் கொண்ட முருகன், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் உள்ளார்.
நவலிங்க கோவில் - நவகிரகங்களால் வழிபடப்பட்ட இலிங்கங்கள் உள்ள கோவிலாகும்.
சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. பேரம்பலம் என்பது தேவசபை என்றும், நிருத்த சபை என்பது நடனசபை என்றும், கனகசபை என்பது பொன்னம்பலம் எனவும் அறியப்பெறுகிறது.
உலகில் உள்ள அனை்தது சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடைபெறுகிறது.
இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடரானராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர். பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது. இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி மூன்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
  1. தேவாரம் - 11 திருப்பதிகங்கள்
  2. திருவாசகம் - 25 திருப்பதிகங்கள்
  3. திருக்கோவையார்
  4. திருமுறைக் கண்ட புராணம்
  5. திருவிசைப்பா
  6. திருபல்லாண்டு
  7. திருமந்திரம்
  8. கோயில் நான்மணிமாலை
  9. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
  10. பெரியபுராணம்
  11. சிதம்பரம் மணிக்கோவை
  12. சிதம்பரச் செய்யுட் கோவை
  13. சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  14. தில்லைக்கலம்பகம்
  15. தில்லையுலா
  16. மூவரு லா
  17. தில்லை யமகவந்தாரி
  18. சிதம்பரவெண்பா
  19. சிதம்பர சபாநாத புராணம்
  20. பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்
  21. புலியூர் வெண்பா
  22. நடேசர் திருவருட்பா
  23. நடராச திருவருட்பா
  24. நடராசர் சதகம்
  25. நடராசர் திருப்புகழ்
  26. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
  27. சேக்கிழார் புராணம்
  28. சிவகாமியம்மைப் பதிகம்
  29. தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி
  30. தில்லை நவமணி மாலை
  31. சிதம்பர விலாசம்
  32. பரமரகசிய மாலை
  33. திருவருட்பா
  34. தில்லைத் திருவாயிரம்
  35. புலியூர் புராணம்
  36. சிதம்பரப் புராணம்
  37. நடராஜர் காவடிச்சிந்து
  38. நடராசர் பத்து
  39. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்
  40. சிதம்பரம் பட்டியல்
  41. முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
  42. சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
  43. தில்லை பாதி நெல்லை பாதி

No comments:

Post a Comment