Saturday, April 9, 2016

பிரம புராணம் பகுதி-2



இயற்றிய பிறகு பிரம்மா ஆயுர்வேதம் இயற்றினார். அதற்குப் பின் தோன்றிய வைத்திய நூல்கள் அனைத்திற்கும் மூலம் ஆயுர்வேதம் தான்.
ஒருவனுக்கு நோய் வராமலிருக்க செய்ய வேண்டியவை : தூய்மை, தலை, காது, பாதங்களுக்கு எண்ணெய் தேய்த்தல், கண்களைத் தூயநீரால் கழுவுதல், அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், தண்ணீரில் குளித்தல், சந்தனம் பூசிக்கொள்ளுதல், சரிவிகித உணவு, கட்டுப்பாடுடன் உண்ணுதல், தயிர் சேர்த்துக் கொள்ளுதல் (பகலில் மட்டும்) இவ்வாறு உணவு நியமனம், தூயஉடை, இருப்பிடத்தூய்மை ஆகியவற்றுடன் நல்லொழுக்கம் கொண்டு பாவம் செய்யாதிருத்தல் போன்றவை நோயை அண்டவிடாமல் தடுக்கும். பின்னர் உபவர்ஹனன் இறந்திட்டான். அவன் மனைவி மாலவதியும் அடுத்த பிறவியிலும் உபவர்ஹனனே தனக்குக் கணவனாக வேண்டுமென்று பிரார்த்திக் கொண்டே உயிரை விட்டாள். அடுத்த பிறவியில் மனு வம்சத்தினான சிரிஞ்ஜயன் என்ற மன்னனுக்கு மகளாய்த் தோன்றினாள். அவள் ஒரு ஜதிஸ்மாரை-அதாவது முற்பிறவி விவரம் நினைவில் கொண்டவள். கன்யாகுப்ஜ இராணிகலாவதியின் புதல்வனாக உபவர்ஹனன் பிறந்தான். அவன் பிறப்பதற்கு முன் அந்நாட்டில் பஞ்சம் தாண்டவமாடியது. அவன் பிறந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது. எனவே நீர்கொடுப்பவன் என்ற பொருள் கொண்ட நாரதன் என்ற பெயர் பெற்றான்.
நாரதர் வரலாறு
ஓர் அடர்த்தியான காட்டில் நாரதர் கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணர் அவர்முன் தோன்றி உடனே மறைந்துவிட மிகவும் வருத்தமுற்றான் நாரதன். அப்போது நாரதன் மரணமடைந்து பின் தெய்வீக உருவடையும்போது மறுபடியும் கிருஷ்ணனைக் காணலாம் என்றோர் அசரீரி கூறிற்று. நாரதர் மிகவும் பிரம்மமுடன் இணைந்து விட பிரம்மாவின் சாபம் முடிவுற்றது. நாரதர் உலகில் வாழ்ந்தபோது பிரம்மா அவனை அழைத்து கிருகஸ்தா சிரமத்தில் பிரவேசிக்குமாறு கூற, அது தன் தவத்தைக் கெடுக்கும் என்றார். பிரம்மன் நாரதனுக்கு பிரம்மச்சரியம், கிரகஸ்தியம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் ஆகியவை பற்றி விளக்கி இல்லறம் ஏற்று ஒரு புத்திரனைப் பெறுதல் அவன் கடமை என்றார். அடுத்து நாரதன் சிவலோகம் சென்று சிவனைத் தரிசிக்க அவர் வாழ்க்கை முறைகள் பற்றி அறிவுரை பகன்றார். மேலும், கிருஷ்ணனைப் பூசித்தலில் சிறந்த வழி சாலக்கிராம பூஜை என்று கூறி பூசை முறைகளையும், உணவுக்கட்டுபாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். யமனும் பூசையில் ஆத்மார்த்த பக்தியும், உண்மை உணர்வும் மிகவும் அவசியம் என்றார்.
சிவலோகத்திலிருந்து பதரிக்குச் சென்ற நாரதன் அங்கு நாராயண முனிவரின் ஆசிரமத்தைக் கண்டார். முனிவர் நவரத்தினமய ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அப்சரசுகளும், கந்தர்வர்களும் சூழ்ந்திருந்தனர். நாரதன் முனிவரைக் கண்டதும் அவர் நாரதனை அமரச் செய்து கிருஷ்ணன் வரலாற்றைப் பற்றி விவரித்தார். (நாராயண முனிவர் வேறு. ஸ்ரீமந்நாராயண பகவான் வேறு) (இந்தப் பிரம வைவர்த்த புராணத்தில் பிரமகாண்டம் பகுதி முடிந்தது.)
 பிரகிருதியின் உருவங்கள்
நாராயண ரிஷி நாரதருக்கு ஐந்து அடிப்படை பிரகிருதி பற்றி விளக்கினார். பிர என்றால் மிகச்சிறந்தது. கிருதி என்றால் உற்பத்தி. எனவே பிரகிருதி என்றால் மிகச்சிறந்த உற்பத்தி என்று பொருள்படும். உற்பத்தியில் தலையாயது பெண் தெய்வங்கள். அவர்களிலும் குறிப்பாக துர்கை, ராதை, லக்ஷ்மி, சரசுவதி, சாவித்திரி மிக முக்கிய வடிவங்கள். மற்ற தேவதைகள் இவர்கள் மூலம் உற்பத்தியாகி இவர்களுடைய அம்சங்களுடன் விளங்குபவை. அவை புனித கங்கை, புனித துளசி, நாகதேவதை மானசை, பிறந்த சிசுக்களுக்கான தேவதை ஷஷ்தி, தேவி மங்களச்சண்டி, காளி வசுந்தரா (பூமி). அடிப்படை பிரகிருதியிலிருந்தே எல்லாப் பெண்களும் தோன்றினர். எனவே பெண்களைத் துன்புறுத்துவது, அவர்களுக்குத் தீமையிழைப்பது, பிரகிருதி தாய்க்கு செய்யும் கொடுமைகள் என அறிதல் வேண்டும். அவர்களுக்கும் அளிக்கும் மரியாதை பிரகிருதி தேவிக்கு அளிக்கும் மரியாதை ஆகும். சக்திக்கு ராஜசம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று அடிப்படை குணங்கள் உண்டு. பிரகிருதியின் சத்துவகுணம் கொண்ட பெண்மணிகள் நல்லொழுக்கம் கொண்டவராய், கணவனே கண் கண்ட தெய்வமாய் இருப்பவர்.
பிரகிருதியின் ராஜச குணம் படைத்த பெண்டிர் தன்னலம் கொண்டு, வாழ்க்கையின் இன்பங்கள் துய்ப்பதில் நாட்டம் கொண்டவராய் இருப்பர். தாமச குணம் கொண்ட பெண்கள் கூர்மையான நாக்குடையவராய் சண்டை சச்சரவில் ஈடுபட்டும், நம்பிக்கையற்றவராய், கணவனுக்குத் துரோகம் செய்பவர்களாய் இருப்பர். பரமாத்மாவுடன் இணைந்து இருப்பதே பிரகிருதி. அது தனிப்பட்டதல்ல. பிரகிருதி இன்றி பரமாத்மா இல்லை. சிருஷ்டி துவக்கத்தில் கிருஷ்ணர் தன்னில் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் பிரித்துக் கொண்டார். அந்த அழகிய பெண்வடிவமே பிருகிருதி ஆகும். அவருக்கே ராதை, ராதிக என்ற பெயரும் உண்டு. இப்பகுதியில் ராதை, கிருஷ்ணருக்குச் சிருஷ்டியில் உதவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இனி பிரகிருதி காண்டத்தில் சரஸ்வதி பற்றிய விவரங்கள். அதாவது பிரகிருதியைப் பூசிக்கும் விரதங்களும் மற்றும் பல கதைகளும் தரப்படுகின்றன.
வேதவதியும் சீதாதேவியும்
ஸாவர்ணி என்ற மன்னன் வினயமின்றி இருந்ததால் கோபம் கொண்ட சூரியன் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்ய, அதனால் கோபம் கொண்ட சிவன் சூரியனைச் சூலத்தால் குத்தமுனைய அவன் பயந்து பிரம்மனை நாட, பிரம்மன், கிருஷ்ணனைச் சரணமடையுமாறு கூற, அவன் சென்று கிருஷ்ணனிடம் சரணடைந்தான். அப்போது அங்கே வந்த சிவனைச் சாந்தமடையச் செய்து கிருஷ்ணன் சூரியன் தந்த சாபத்தின்படி ஸாவர்ணி தேசப்பிரஷ்டம் ஆவான். ஆனால், அவனது மக்கள் நாடாள்வர் என்றார். மேலும் லக்ஷ்மி தேவி அவர்கள் வம்சத்தில் குழந்தையாய் அவதரிப்பாள் என்றார். ஸாவர்ணியின் மகன் விருஷத்வஜன், அவன் குமாரன் ருதுத்வஜன். அவனுக்குத் தர்மத்வஜன், குசத்வஜன் என்று இரண்டு புத்திரர்கள். அவர்களுள் குசத்வஜன், மனைவி மாலாவதியிடம் லக்ஷ்மியின் அமிசமான வேதவதி பிறந்தாள். அவள் பிறந்தபோது வேத ஒலி கேட்டதால் அவள் பெயர் வேதவதி எனப்பட்டது. வேதவதி விஷ்ணுவையே மணக்க வேண்டி புஷ்கரதீரத்தில் பிரம்மனை நோக்கித் தவம் செய்ய பிரம்மா தோன்றி அடுத்த ஜன்மத்திலேயே அந்தப் பேறு கிடைக்குமென ஆசிர்வதித்து மறைந்தார்.
வேதவதி தவம் செய்து கொண்டு இருக்கையில் அங்கு ராவணன் வந்து மோகம் கொண்டு அவளைத் தன்னை மணக்குமாறு வேண்டி பலாத்காரம் செய்ய முயன்றான். அவனுக்கு அதிதி பூஜை செய்ய நினைத்த அவள் மிக்க கோபம் கொண்டு தன் வலிமையால் அவனைத் தடுத்து என்னாலேயே உனக்கு மரணம் ஏற்படும் என்று சபித்தாள். பின்னர் யோக சக்தியால் கங்கையில் குதித்து உயிர் விட்டாள். அடுத்த பிறவியில் வேதவதி இலங்கையில் ஒரு தாமரைப்பூவில் பெண் குழந்தையாகத் தோன்றிட அதை ராவணன் ஒரு பெட்டியில் வைத்துக் கடலில் மிதக்க விட்டான். அந்தப் பெட்டி மிதிலை நகரை அடைந்தது. ஜனக மகாராஜன் ஏர்கொண்டு நிலத்தை உழ ஏர்க்காலில் பெட்டி சிக்கியது. திறந்து பார்க்க அதில் கண்ட குழந்தையை எடுத்து வளர்த்து இராமனுக்கு மணம் செய்வித்த விவரம், ராமன் ராவணனைக் கொன்றது ஆகியவற்றை இராமாயணம் கூறும். வேதவதியே சீதையாக அவதரித்தாள்.
 மூன்று தேவியர்
நாரதரிடம் நாராயணன் கூறினார். மாக மாதத்தில் (மாசி) பஞ்சமி அன்றும், வித்தை கற்கத் துவங்கும் விசயதசமி அன்றும் சரசுவதியைத் துதிக்க வேண்டும். வெண்மலர்கள், சந்தனப்பசை, வெள்ளை நிற ஆடை, வெண் சங்கு உபயோகிக்க வேண்டும். பூஜையின் போது மேலும் வெண்ணெய், தயிர், பால், கருப்பஞ்சாறு, வெல்லம், தேன், சர்க்கரை, சதைப்பற்றுள்ள பழங்கள், தேங்காய், இஞ்சி, வாழைப்பழம், நெய்யில் (அரிசிமாவு () கோதுமை மாவு) கொண்டு தயாரித்த இனிப்புகள் நைவேத்தியம் செய்ய வேண்டும். முதலில் லக்ஷ்மி, சரசுவதி, கங்கை மூவரும் நாராயணனின் தேவிகளாக இருந்தனர். ஒருநாள் சரசுவதி கங்கை மீது பொறாமைப்பட்டு சண்டை போட முதலில் லக்ஷ்மி அமைதியாக இருந்தாள். அவள் சரசுவதி, கங்கை இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றாள். சரசுவதி லக்ஷ்மியிடம் ஏன் முதலிலேயே தடுக்காமல் வேடிக்கை பார்த்தாய்? என்று கோபப்பட்டு அவளை மரமாகவும், நதியாகுமாறும் சபித்தாள்.
கங்கை சரசுவதியை நோக்கி நீ லக்ஷ்மியை நதியாகச் சபித்ததனால் நான் உன்னையும் நதியாகுமாறு சபிக்கிறேன் என்றாள். உடனே சரசுவதி கங்கையும் நதியாகுமாறு சபித்தாள். லக்ஷ்மி துளசியானாள், மற்றும் பதுமாவதி ஆறு ஆனாள். கங்கை பாகீரதி நதி ஆனாள். சரசுவதி அதே பெயரில் நதியானாள். நாராயணன் கங்கையைச் சிவனிடமும், சரசுவதியைப் பிரம்மாவிடமும் அனுப்பி தான் லக்ஷ்மியுடன் இருந்தார். ஏனெனில் சண்டையில் லக்ஷ்மி அமைதியாக நடந்து கொண்டாள். ஒருவனுக்கு மூன்று மனைவியர் வேதத்துக்கு விரோதமானது.
கலியுக முடிவும் கல்கி அவதாரமும்
சாபங்கள் உண்மையாக, மூன்று தேவியரும் ஆறுகளாகினர். கலியுகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திட லக்ஷ்மி சாபம் நீங்கித் திரும்பவும் நாராயணனை வந்தடைந்தாள். சரசுவதி, கங்கை இருவரும் கூட நாராயணனை அடைந்தனர். கலியுகத்தில் தூய்மையும், புனிதமும் உலகில் இல்லாமல் போகும். கலியுகம் பொதுவாக கொடிய காலமாகவே விளங்கும். மக்கள் லஞ்சம் வாங்குபவராகவும், இம்சை செய்பவர்களாகவும், நாணயமற்றவர்களாகவும் இருப்பர். துளசியை பூசையில் சேர்க்கமாட்டார்கள். வருணாசிரம தருமங்கள் மாறிவிடும். பிராமணர்கள் சமையல் செய்பவர்களாகவும், மாடு மேய்ப்பவர்களாகவும் இருப்பர். இல்லறத்தில் சண்டை, சச்சரவு, கலவரம், கணவன் மனைவி தகராறு போன்றவை ஏற்படும். ஆறு, குளங்கள் வற்றிட செடி, கொடிமரங்கள் பலன் தராமல் போகும். பயிர்கள் அழியும், பசுக்கள் பால் வற்றும், உணவுக் கட்டுப்பாடுகள் இருக்காது. மக்கள் குறைவற்ற உருவங்களுடன் இருப்பர். விரைவில் முதுமை அடைவர். கலியுக முடிவில் தர்மம் ஒழியும், நாராயணனே விஷ்ணுயசன் என்ற பிராமணனுக்குப் புத்திரனாகக் கல்கி அவதாரம் எடுப்பார். குதிரை சவாரி செய்து, வாள் கொண்டு உலகில் மிலேச்சர்களை அழிப்பார். அவர் மறையும் போது உலகில் குழப்பம், அராஜகம் காணப்படும்.
பசி, பட்டினி, பஞ்சம் ஏற்பட்டு பிரளயம் ஏற்படும். இவ்வாறு கலியுகம் முடிய மறுபடியும் சத்தியயுகம் துவங்கும். இவ்வாறு சிருஷ்டியும், அழிவும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். பிரம்மாவின் ஆயுள் முடியும் போது அண்டம் அனைத்தும் நீரில் மூழ்கிவிடும். பிரம்மாவும் கிருஷ்ணனில் ஐக்கியமாகி விடுவார். இது பிராகிருதிக பிரளயம் எனப்படும். இதில் பிரகிருதியும் கிருஷ்ணனுடன் இணைந்து விடும். எனவே, புல் முதல் பிரம்மா வரை அனைத்தும் நிலையற்றவை. தோன்றி மறைபவையே. ஆனால், கிருஷ்ணன் மட்டும் நிலையானவர் அழிவற்றவர் என்பதை உணர வேண்டும்.
வசுந்தரா என்னும் புவிமகள்
நாராயணன் அடுத்து நாரதனிடம் பூதேவி, புவிமகள் என்று பல பெயர்களில் பேசப்படும் வசுந்தரா பற்றிக் கூறலானார். மது கைடபர்களின் கொழுப்பினால் ஆனதால் அதனை மேதினி என்கின்றனர். ஆனால், அது சரியில்லை. மேலும் மது கைடபவர்களுக்கு முன்பே பூமி இருந்தது. ஒருவேளை அந்த அரக்கர்களின் கொழுப்பு பூமியில் சேர்ந்திருக்கலாம். எனவே, உலகம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பதை நாராயணன் கூறுகிறார். பிரளயத்தினால் உலகம் நீரில் மூழ்கியபோது கிருஷ்ணன் ஒரு பெரிய உருண்டையைத் தன் உடலிலிருந்து எறிய அது பல ஆண்டுகள் மிதந்திட அதன் துளைகள் கடின பொருள்களால் மூடிட அந்த உருண்டையே நீரிலிருந்து வெளிப்பட்டது. இவ்வாறு தோற்றமும் மறைவும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வராஹ கல்பத்தில் பிரம்மா மூழ்கியுள்ள புவியை வெளிக்கொண்டு வருமாறு வேண்டிட, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்று புவியை மீட்டார். எனவே, புவிமாது வராகத்தில் மனைவியாக அதாவது விஷ்ணு பத்தினியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பூதேவி அங்காரகனை ஈன்றாள். இதனால்

No comments:

Post a Comment