Saturday, April 9, 2016

மஹா அவதார் பாபா




மஹா அவதார் பாபாஜி இன்றும் நம்மோடு இருப்பவர்.இன்னும் இருக்கப்போகிறவர் இவரைப்பற்றி தெரிந்துகொள்வோம் இவர் பரங்கிப் பேட்டையில் பிறந்து, பத்ரிநாத்தில் சொரூப சமாதியடைந்த இவரைப் பற்றி வெளி உலகுக்கு அறியக் கிடைத்த தகவல்கள் வெகு சிலவே. ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட க்ரியா யோகத்தை முன்னெடுத்துச் செல்லும் மாபெரும் ஆசிரியர் பாபாஜி. இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாயோகி. இவர் க்ரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவாபாபா என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும் பதினாறு வயதினராக வாழும் பாபாஜி ஒரு மாபெரும் சித்தர். மகா அவதாரம் என்று போற்றப்படுபவர்.

பாபாஜி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே ஆன்மீக சாதகர்களுக்கு உதவுபவர். வெகு சிலருக்கு மட்டுமே அவர் நேரடியாக தீட்சை வழங்கியிருக்கிறார். அப்படி தீட்சை வழங்கப்பட்டவர்களுள் ஒருவரான யோகியார் ராமையா மூலம் இவரது இளம் பிராயத்துக் கதை வெளிப்படுத்தப் பட்டது.

கி.பி. 203, நவம்பர் 30 ஆம் நாள் தமிழ் நாட்டில் பரங்கிப் பேட்டையில் வசித்து வந்த நம்பூதிரிப் பிராமணத் தம்பதியருக்கு குழந்தை ஒன்று பிறந்தது. கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயரிடப்பட்டது.

நாகராஜின் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் அவனது பற்றற்ற வாழ்க்கைக்கு அடிகோலியது. நாகராஜ் நான்கு வது சிறுவனாக இருந்தபோது அந்த திருப்புமுனைக்கு வழிகோலிய சம்பவம் நடந்தது. வீட்டில் நடைபெற இருந்த வைபவம் ஒன்றுக்காக நாகராஜின் தாயார் பலாப்பழம் வாங்கி வந்தார். குழந்தை நாகராஜுக்கோ பலாப்பழம் என்றால் பைத்தியம்! தாயார் பழத்தை வைத்துவிட்டு தனது வேலைகளைக் கவனிக்கச் சென்றதும், நாகராஜ் பழம் முழுவதையும் சாப்பிட்டுவிட்டான்.

பலாப்பழத்தை எடுக்க வந்த தாயார் பழத்தை நாகராஜ் சாப்பிட்டு முடித்திருப்பதைக் கண்டு சினமுற்றார். கோபத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி குழந்தையின் வாயில் ஒரு துணியை வைத்து மூச்சுத்திணறும்வரை அடைத்துவிட்டார். நல்லவேளையாக தப்பிப் பிழைத்து,மரணத்தின் வாசலை எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிய நாகராஜின் மனதில் தாய் என்பவள் எந்தவிதப் பிடிமானமும் இன்றி நேசிக்கப்பட வேண்டியவள் என்ற எண்ணம் தோன்றியது.

ஐந்து வயதை எட்டிப் பிடித்த நாகராஜ், ஒருநாள் பரங்கிப்பேட்டை சிவன் கோயில் முன்றிலில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது அழகால் கவரப்பட்ட வெளிநாட்டு வியாபாரி ஒருவன் குழந்தையை விற்க நினைத்து கடத்திச் சென்றுவிட்டான். அவன் நாகராஜை கல்கத்தா கொண்டு சென்று அங்கு ஒரு பணக்காரனுக்கு அடிமையாகவிற்றுவிட்டான்.

சில காலம் சென்றபின் இரக்க சித்தமுடைய அந்தப் பணக்காரர் நாகராஜை விடுவித்து விட்டார். விடுவிக்கப் பட்டதும் கல்கத்தாவிலிருந்த சந்நியாசிகளின் குழுவுடன் போய்ச் சேர்ந்துகொண்டான் நாகராஜ். அவர்களிடம் வேத உபநிடதங்களையும் இதிகாசங்களையும் கற்று சிறந்த அறிஞனானான். பல அறிஞர்களுடன் விவாதம் செய்வதுடன் அதில் ஏற்படும் சிக்கல்களையும் சிறந்த முறையில் தீர்த்துவைப்பான். காலம் செல்லச் செல்ல நாகராஜ் மெய்யியல் விவாதங்கள் ஒருவரை மெய்ம்மைக்கு அருகில் அழைத்துச் செல்வதில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

அந்த சந்தர்ப்பத்தில், தனது பதினோராவது வயதில் சந்நியாசிகளுடன் சேர்ந்து இலங்கையிலுள்ள கதிர்காமத்திற்கு பயணம் மேற்கொண்டார் நாகராஜ். கதிர்காமத்தில் சித்தர் போகநாதரைச் சந்தித்த நாகராஜ், அவரது சீடரானார். கதிர்காமத்தில் ஒரு ஆலமர நிழலில் போகரின் வழிகாட்டலில் யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் பழகினார். அவற்றைப் பயின்று கதிர்காமத்தில் சவிகற்ப சமாதி நிலையை அடைந்தார் நாகராஜ். அதோடு அங்கு முருகனின் தரிசனமும் பெற்றார்.

போகநாதர், அகஸ்தியரிடம் சென்று க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் உபதேசம் பெறும்படி நாகராஜை பொதிகைக்கு அனுப்பிவைத்தார். பொதிகை மலை சென்ற நாகராஜ் அகஸ்தியரின் தரிசனம் பெறவேண்டி நாற்பத்தெட்டு நாட்கள் தியானத்தில் அமர்ந்தார். நாற்பத்தெட்டாம் நாள், நாகராஜ் கிட்டத்தட்ட வாழ்வின் முடிவை நெருங்கிவிட்ட நேரத்தில் அகஸ்தியர் தரிசனமளித்து அவரைக் காப்பாற்றினார். அங்கே நாகராஜுக்கு க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் தீட்சையளித்து, அதன் நுணுக்கங்களையும் விளக்கி, இமயமலையிலுள்ள பத்ரிநாத்துக்குச் செல்லும்படி பணித்தார் அகஸ்தியர்.

முற்காலத்தில் நர, நாராயணர் தவம் புரிந்த பத்ரிநாத்தில் பதினெட்டு மாதங்கள் க்ரியா யோக நுணுக்கங்களைஎல்லாம் தீவிரமாகப் பயிற்சி செய்து சொரூப சமாதி அடைந்தார். அன்றிலிருந்து சித்தர் பாபாஜியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அன்பர்களுக்கு உதவி வருகிறார். ஆதிசங்கரர், கபீர், லாகிரி மகாசயர், யோகி ராமையா, நீலகண்டன் போன்ற சிலருக்கு மட்டுமே பாபாஜி நேரடியாக தீட்சை வழங்கினார். The Voice of Babaji and Mysticism Unlocked, Babaji's Master key to All, மற்றும் Death of Death என்ற மூன்று நூல்களும் பாபாஜி சொல்லச் சொல்ல நீலகண்டனால் எழுதப்பட்டவை.

உலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள் பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி. இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுகிறது. தனது சகோதரி மாதாஜி நாகலட்சுமி தேவியாருடன் பத்ரிநாத்தில் உள்ள தனது ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகிறார் பாபாஜி. 'எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன்' என்பது அவரது வாக்கு. எங்கும் அன்பு நிறைந்து, பாபாஜியின் பேரருள் பொழியட்டும்.
           பாபாஜியை வணங்குவோம்   பரம்பொருளை உணர்வோம்

No comments:

Post a Comment