Thursday, April 14, 2016

திவ்ய தேசங்கள்




 விஷ்ணு இவனே இறைவன். இவனே சகல ஜீவராசிகட்கும், தேவர்கட்கும் சகல
லோகங்களுக்கும் ஆத்மாவாக இருப்பவன். “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்.
இந்த மகாவிஷ்ணு பரமபதத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் எந்நேரமும் நித்ய
சூரிகளால் பல்லாண்டிசைக்க சகல லோகங்களையும் காத்தருள்கிறான்.

     இவர் உலகு படைப்பதற்காகவும், பக்தர்கட்காகவும் தம்மை ஐந்து
வடிவங்களில் உண்டாக்கி தரிசனம் தருகிறார் என்பது மரபு. அவைகள் பரம்,
வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை என ஐவகைப்படும். இதனை
விரிவுறக் காணலாம்

1) பரம்

     பரமபதத்தில் திருமகள், மண்மகள் எனப்படும் பூமாதேவி, நீளாதேவி
என்ற மூன்று தேவிமார்களுடன் எழுந்தருளியிருக்கிறார். இங்கு பகவானுக்கோ,
மற்றவர்கட்கோ, பசி, தாகம், தூக்கம், துக்கம், அயர்வு என்பன கிடையாது.
இங்குள்ளவர்களையே நித்ய சூரிகள் என அழைப்பதுண்டு. இவர்கள்
அத்தம்பதிகளின் அழகிலும், கல்யாண குணங்களிலும் ஈடுபட்டு எப்போதும்
அவர்களைச் சாம கானத்தில் புகழ்ந்து கொண்டு ஆனந்தித்திருப்பார்.
அத்தம்பதிகளோ இவர்களின் சேர்த்தியில் ஆனந்தம் கொண்டிருப்பர்.
இவ்வுலகிற்குப் பாட்டுக் கேட்கும் உலகு என்று பெயர்.

2) வ்யூகம்

     ஸ்ரீமந்நாராயணன் பரமபதமாகிய இந்த வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு
வெள்ளையந்தீவு என்று சொல்லப்படும் சீராப்தி என்ற பாற்கடலில்
பக்தர்களின் தரிசனத்திற்காகவும் தன்னைக் கீழ்க்கண்ட வ்யூகமாக பிரித்து
ஆதிசேடனின் படுக்கையில் திருமகளும், பூமகளும் திருவடி வருட யோக
நித்திரை செய்து அறிதுயிலமர்ந்த நிலையில் உள்ளார். இதைத்தான்
உறங்குவது போல யோகு செய்து என்பார் நம்மாழ்வார்.

     இந்த வ்யூகத்தில் (வ்யூகம் என்றால் விரிவுபடுத்துதல் எனப் பொருள்)
  கிழக்கு நோக்கிச் சிரிப்புடன் கூடிய வாசுதேவனாகவும்
     தெற்கு நோக்கிச் சிங்கமுகம் கொண்ட சங்கர்ஷனனாகவும்
     வடக்கு நோக்கிய வராகமுகம் கொண்ட பிரத்யுமனனாகவும்
     மேற்கு நோக்கிய ருத்ரமுகம் கொண்ட அனிருத்னாகவும்
     தம்மை வ்யூகப்படுத்தி சர்வ திக்குகளையும் நோக்கியுள்ளார்.

     தேவர்கள் தமக்குத் துன்பம் நேரிடும்போதெல்லாம் இந்தப் பாற்கடலின்
கரையில் வந்து நின்று ஸ்ரீமந் நாராயணனைப் பற்றியெழுப்பி தமது
முறையீட்டினைத் தெரிவித்து அபயக்குரல் கொடுப்பர். எம்பெருமானும்
அபயமளிப்பான். எனவே இந்த உலகிற்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று
பெயர்.

     இந்த வ்யூக வாசுதேவனுடன் மற்றைய மூன்று உருவங்களும் பிரளய
காலத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்பது ஐதீஹம்.

3) விபவம்

     விபவம் என்ற வடசொல்லுக்கு இறங்கி வருதல் என்று பொருள்.
பக்தர்கட்காகவும் உலகுய்யவும் - இரண்டிடங்களிலிருந்து இறங்கி வருதல்,
ஸ்ரீஇராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும், பூவுலகில் தோன்றிய அவதாரங்களை
விபவம் என்பர். இவைகள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச
அவதாரம் என்று வகைப்படும்.

     இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம்.
மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம்.

     நரசிம்மம் - ஆவேச அவதாரம்.

4) அந்தர்யாமித்வம்

     இதில் ஒவ்வொரு ஜீவாத்மாவின் உள்ளிருந்தும் அதைத் தாங்கி
நிற்பதாக ஐதீஹம். அந்தர்யாமியாக - மறைமுகமாக (உள்ளுக்குள் உணர்வாய்,
உணர்வுக்குள் உயிராய்) மானிடர்களின், ஞானிகளின், பக்தர்களின்
உள்ளத்திலிருந்து தம் சக்தியை வெளிப்படுத்தும்.

5) அருச்சை

     நம்மைப்போன்ற சாமான்ய மனிதர்கள் பரம், வ்யூகம், விபவம்,
அந்தர்யாமித்வம் என்னும் இவைகளை கண்ணால் காண்பதும், கருத்தால்
தீண்டலும் அரிதே. ஆம் பரமபதத்திற்குச் செல்ல நாம் நித்ய சூரிகளாக
இல்லை. வ்யூகத்தைக் காண நாம்
தேவர்களாயில்லை. விபவ அவதாரங்கள் நிகழ்ந்த காலக் கட்டத்தில் நாம்
எப்படிப்பட்ட ஜென்மங்களாக இருந்தோம் என்பதை உணருமாறில்லை.
அந்தர்யாமித்யமாய் இருப்பதை அறியும் ஆற்றலும் நமக்கு இல்லை.
எனவேதான் ஒரு மனிதன் (ஒரு பக்தன்) தங்கம், வெள்ளி, கல், மரம்,
சாளக்கிராமம், முதலிய வஸ்துக்களில் யாதாயினுமொரு கருப்பொருளில் தன்
மனதிற்குகந்தவாறும், சாஸ்திரங்களில் கூறியமுறை வழுவாமலும்
மேற்சொன்னவற்றில் ஏதாயினுமோர் உருவத்தை பிரதிட்டை செய்து வழிபடும்
முறைக்கு அருச்சை அல்லது அர்ச்சாவதார வழிபாடு என்று பெயர்.
இதனையே விக்ரக ஆராதனை அல்லது உருவ வழிபாடு என்றும் சொல்வர்.

     மனிதர்கள் செய்யாமல், பக்தர்களின் வேண்டுகோளுக்காக எம்பெருமான்
தானே யுகந்து அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியதுண்டு. பக்தர்கள்
விரும்பிய உருவங்களில் இந்த அர்ச்சா வடிவங்களில் தன்னை
வெளிக்காட்டியதுண்டு.

     நம் போன்று இந்தக் கலியுகத்தில் வாழ்பவர்கட்கு அர்ச்சாவதாரம்
போன்று எளிதாக வேறென்ன இருக்க முடியும். அல்லது இதை விடுத்தால்
தான் நம் மனதில் பக்திக்கு அடைக்கலம் அளித்து உய்விக்க வேறு என்ன
உபாயம் இருக்க முடியும்.

     புகலொன்றில்லா அடியேன் நின்னடிக்கீழ் புகுந்தொழிந்தேனே
என்றாற் போல் இதைவிட்டால் நமக்கு புகலேது.

     முக்தியடைந்தவன் பரமபதத்திலிருந்து கொண்டு எப்போதும்
எம்பெருமானின் திவ்யத்தில் மூழ்கியிருக்கிறான். எனவே அவன் பூலோகத்தில்
நித்ய சேவை சாதிக்கும் திருமலை வேங்கடவனையோ, குடந்தைக் கிடந்த
ஆராவமுதனையோ, துவாரகாபுரி கண்ண பிரானையோ சேவிக்க எண்ணினால்
அது முடியாதாம்.

     இதைத்தான் ஆழ்வார் போயினால் பின்னையித் திசைக்கு பிணை
கொடுக்கிணும் போக ஒட்டான் என்கிறார். அதாவது பரமபதத்தில் இருக்கும்
முக்தனை எம்பெருமான் போக வொட்டான்.

     எனவே பூவுலகில் வந்தவனுக்கு அர்ச்சா மூர்த்தியைவிட்டால் வேறு
யார் அடைக்கலம்.

     எனவே அர்ச்சாவதாரமே நம்மை இறைவனிடம் நெருக்கி கொண்டு
சென்று பரமபதத்து நித்ய சூரிகளில் ஒருவனாக ஆக்கும். நம்மையெல்லாம்
உய்விக்கும் பொருட்டே எம்பெருமான் அர்ச்சாவதார மூர்த்திகளாய் இங்கு
எழுந்தருளியுள்ளான். எனவே எளிது எளிது நமக்கு அர்ச்சாவதாரமே எளிது. இதைத்தான் நமக்கு ஆழ்வார்கள் காட்டிக் கொடுத்தனர். வேதம் தமிழ்
செய்த மாறனான நம்மாழ்வார் இந்த அர்ச்சாவதாரமே நமக்கு எளிது என்று
அடையாளங் காட்டிப் போந்தார் என்கிறார் மணவாளமாமுனிகள்.
     செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
          துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு
     இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
          பன்னு தமிழ்மாறன் பயின்று
     இவ்வாறு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை, என்னும்
எம்பெருமானின் இவ்வைந்து நிலைகளை வேதத்தைத் தமிழில் விரித்துரைத்த
நம்மாழ்வார் குறிப்பால் உணர்த்திச் சென்றுள்ளார்.
     விண்மீதிருப்பாய், மலைமேல்நிற்பாய், கடற்சேர்ப்பாய்
          மண்மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
     என்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி
          உன்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?
     விண்மீதிருப்பாய்   - பரத்துவம் (பரமபதம்)
     மலைமேல் நிற்பாய் - விபவம் (அவதார புருஷனாக இறங்கி வந்தது)
     கடல் சேர்ப்பாய்   - வ்யூகம் (திருப்பாற்கடலில் 5 வ்யூகமாக பிரித்து)
     மண்மீதுழழ்வாய்   - அர்ச்சை (த்வ்யதேசங்களிலும் பிற
                       ஸ்தலங்களிலுமுள்ள அர்ச்சா மூர்த்திகள்)
     என் மீதியன்ற
     புறவண்டத்தாய்    - அந்தர்யாமியாய் கலந்தது.

     இந்தியாவில் உள்ள ஸ்தலங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

     1) ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தலங்கட்கு ஆர்ஷம் என்று பெயர்.

     2) புராணங்களில் விரித்துரைக்கப்பட்ட ஸ்தலங்கட்குபௌராணிகம்
என்று பெயர்.

     3) தானே தோன்றியவைகள்ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் என்றும் அல்லது
சைத்தம் என்றும் மொழிவர்.
4) பிரம்மாதி தேவர்களால் தவஞ்செய்து உண்டாக்கப்பட்டவைகளை
தைவம் என்பர்.

     5) மன்னர்களாலும், அடியார்களாலும் பிரதிட்டை செய்யப்
பட்டவைகளுக்குமானவம் என்பர்.

     6) ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்டதை அபிமான
ஸ்தலம் என்பர்.

     இத்தகைய அமைப்பிலோ, அல்லது இதில் குறிப்பிடாதவாறு வேறு
வகையில் கட்டப்பட்ட ஸ்தலத்திற்கு ஆழ்வார்களின் பாசுரஞ்
சூட்டப்பட்டதாகில் அப்பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டவராக
ஆகிறார். அத்தலம் திவ்யதேசமாகிறது. அங்கு எம்பெருமான் நித்ய வாசஞ்
செய்கிறான். இந்த ஸ்தலங்கள் கிளிகொத்திய மாங்கனியாகத்
திகழ்பவைகளாகும்.

     எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக அவதரித்தார்கள். அதாவது
எம்பெருமானின் சார்ங்கம் என்னும் வில்லே ஒரு ஆழ்வாராக அவதாரம்.
பிராட்டியே ஸ்ரீ ஆண்டாளாக அவதாரம் செய்தார். இவ்விதம்
எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக வந்து மங்களாசாசனம் செய்ததால்
அத்தலம் திவ்ய தேசமாயிற்று.

     திவ்யம் என்ற வடசொல்லுக்கு தெய்வத்தன்மை பொலிந்தது என்று
பொருள். ஆழ்வார்களின் பாசுரங்கள் பெறப்பட்ட ஸ்தலங்களில்
எம்பெருமான் நித்ய ஸான்னித்தியம் கொண்டுள்ளான். அதாவது அங்கேயே
வாழ்கிறான் என்று பொருள்.

     திவ்யமான மங்கள அர்ச்சா ரூபம், திவ்ய பிரபந்தமென்னும்
மங்களாசாசனமாகிய பாமாலையால் கட்டுண்டு திவ்விய தேசமாக ஆகி
நம்மையும் (பரமபதத்தில்) வைக்கும்படியான நித்ய சூரியாக ஆக்குகிறது.

     பரமபதத்திலிருந்து வரப்பெற்ற திவ்ய சூரிகளால் அவர்களது திவ்யம்
பொருந்திய மொழிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை திவ்ய
ஸ்தலங்களாகும்.

     அணுவிற்குள் அண்டமும், அண்டத்திற்குள் அணுவும் இருப்பதைப்
போன்று திவ்ய சூரியே இங்கு வந்து திவ்ய தேசங்களைக் காட்டிச்
செல்கிறான். அந்த திவ்யதேசங்களில் ஈடுபட்டே ஒருவன் திவ்ய
சூரியாகிவிடுகிறான்.

     நாராயண மந்திரம் மூன்று பதங்களாயிருப்பதைப் போல இந்த
ஸ்தலங்களை (திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் ஸ்தலங்களை) மூன்று
திவ்யங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது
கோவில் திவ்யமாகிறது. பெருமாள் ஒரு திவ்யம், மங்களாசாசனப்
பாசுரம் திவ்யப் பிரபந்தமாகிறது.

     நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும். ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும்
சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

     ஏழு புண்ணியங்கள் என்பவை

          ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம்
     புஷ்கரிணி ததா
          விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ
     இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். இத்தனையும் ஒருங்குகூடிய ஸ்தலத்தை திவ்ய
தேசமெனச் சொல்வதில் தடையு முண்டோ. இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்
108.

     இம்மட்டுமன்றி, இந்த திவ்யதேசங்கள் அதில் அமைந்துள்ள
விமானங்களினாலும் சிறப்பும், மேன்மையும் படைத்தனவாகும்.
மூலஸ்தானத்திற்கு மேலே (கர்ப்பக் கிரகத்திற்கு மேல்) சிற்ப சாஸ்திர
விதிகட்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமே விமானமாகும்.

     108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

     1. ப்ரண வாக்குருதி விமானம்  2. விமலாக்குருதி விமானம்
     3. சுத்தஸ்த்வ விமானம்       4. தாரக விமானம்
     5. சுகநாக்ருதி விமானம்       6. வைதிக விமானம்
     7. உத்பலா விமானம்         8. சௌந்தர்ய விமானம்
     9. புஷ்கலாவர்த்த விமானம்    10. வேதசக்ர விமானம்
     11. சஞ்சீவி விக்ரஹ விமானம்   12. அஷ்டாங்க விமானம்
     13. புண்யகோடி விமானம்      14. ஸ்ரீகர விமானம்
     15. ரம்ய விமானம்            16. முகுந்த விமானம்
  17. விஜய கோடி விமானம் 18. சிம்மாக்கர விமானம்

     19. தப்த காஞ்சன விமானம் 20. ஹேமகூட விமானம்

     என்பனவாகும். இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில்
அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும், ப்ராண வாக்ருதி
விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள
விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப்போகிறது. இந்த
விமானங்களைச் சேவித்த மாத்திரத்திலேயே பாவ நாசம் உண்டாகிற
தென்பதும், இதன் அடிப்படையிலேயே கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்
என்னும் பழமொழி உண்டாயிற்றெனவும் ஆன்றோர் மொழிவர்.

     இந்த 108 திவ்ய தேசங்களில் இரண்டு ஸ்தலங்கள் இந்நிலவுலகில்
பார்க்க முடியாதவைகளாகும். ஒன்று பரம பதம். மற்றொன்று பாற்கடல்.

     எஞ்சிய 106 திவ்ய தேசங்களில் வடநாட்டு ஸ்தலங்கள் 12 இதில்
திருமலை என்னும் திருவேங்கடமும், அஹோபிலம் என்னும் சிங்கவேள்
குன்றமும் விந்திய மலைக்கு இப்பால் தென்னாட்டிலேயே அமைந்துள்ளன.
எனவே தென்னாடு மட்டும் 96 திவ்ய தேசங்களுடைத்து. இவைகள்
தென்னாட்டில் அமைந்ததற்கு ஒரு காரணமுண்டு. இதற்கு தஞ்சை
என்.எஸ்.தாத்தாச்சார்யாரின் திருநறையூர் ஸ்தலவரலாற்று நூலில் காணப்படும்
கருத்து அப்படியே இங்கு தரப்படுகிறது.

     முற்காலத்தில் புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த
இடத்தில் ஏற்படுத்தினார்களில்லை. பூமியின் உள்ளே மனித ஜீவாதார
சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி
இருக்குமாம். அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப்பெயர். அது நியூட்டன்
கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும். இத்தகைய இடம் நம்
இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான்
இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும்
கூறினார். ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில்
ஆலயங்கள் பல தோன்றின.

     சரி இந்த 108 திவ்ய தேசங்கள் எங்கெங்கு உள்ளன. இதோ படம்
பிடித்துக் காட்டுகிறது ஒரு பழம் பாடல்.

     ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
     ஓர்பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் - சீர்நடுநாடு
     ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட
நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள்.

     அதாவது,

     சோழநாட்டில்     - 40 திவ்ய தேசங்கள்
     பாண்டி நாட்டில்   - 18 திவ்ய தேசங்கள்
     மலை நாட்டில்     - 13 திவ்ய தேசங்கள்
     நடு நாட்டில்       - 2 திவ்ய தேசங்கள்
     தொண்டை நாட்டில் - 22 திவ்ய தேசங்கள்
     வட நாட்டில்       - 12 திவ்ய தேசங்கள்
     திருநாட்டில்        - 1 திவ்ய தேசம்
                      -----
                       108
                      -----
     இந்த 108 திவ்ய தேசங்களில் 106னைச் சேவித்தவர்களை அவர்கள்
இப்பூவுலகில் வாழவேண்டிய காலக்கட்டாயம் முடிவுற்றதும் எம்பெருமானே
இரண்டு திவ்யதேசங்கட்கும் அழைத்துச் சென்று காட்சி தருகிறார் என்பது
தலையாய வைணவக் கொள்கையாகும்.

     12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் திவ்யதேசங்கள் எதனையும்
மங்களாசாசனம் செய்யவில்லை. அவர் நம்மாழ்வாரைப் பற்றி மட்டும் ஒரு
பதிகம் அருளிச் செய்தார். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் என்று நம்மாழ்வாரிடம் மட்டும் ஆழங்கால் பட்டு அவர்
ஆழ்வாரானார். மீதி பதினொரு ஆழ்வார்களும் கீழ்க்கண்டவாறு
மங்களாசாசனம் செய்துள்ளனர்.

     ஆழ்வாரின் பெயர், மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களின்
எண்ணிக்கை

     1. பொய்கையாழ்வார் 6
     2. பூதத்தாழ்வார் 13
     3. பேயாழ்வார் 15
     4. திருமிழிசையாழ்வார் 17
     5. நம்மாழ்வார் 37
     6. குலசேகராழ்வார் 9
     7. பெரியாழ்வார் 18
     8. ஸ்ரீ ஆண்டாள் 11
     9. தொண்டரடிப் பொடியாழ்வார் 1
10. திருப்பானாழ்வார்                         3

     11. திருமங்கையாழ்வார்                        86

     இந்த ஆழ்வார்களில்

     11  ஆழ்வார்களால் மங்களாசாசனம்
        செய்யப்பட்ட ஸ்தலம்                       1 ஸ்ரீரங்கம்

                                                2
    10                                ........       திருமலையும்
                                                திருப்பாற்கடலும்
     9                               .......        -
     8                               .......        1 பரம பதம்

     7                               .......        1 திருக்குடந்தை
                                                 என்னும்
                                                 கும்பகோணம்
     6                               .......       1 திருமாலிருஞ்
                                                சோலை என்னும்
                                                அழகர்மலை
     5                               ......       6

     4                               ......       3

     3                               ......       5

     2                               ......       21

     1                               ......       67
                                             -----
                                              108
                                             -----
     இந்த 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் மூன்று
நிலைகளில் பக்தர்கட்கு காட்சியளிக்கிறார். அவைகள் நின்ற திருக்கோலம்,
அமர்ந்த திருக்கோலம், சயன (கிடந்த) திருக்கோலம்.

     அதாவது, பரம்பொருள் ஸ்ரீவிஷ்ணு அமர்ந்த திருக்கோலத்தில் சகல
உலகங்களையும், அவ்வுலக இயக்கக் காரணிகளான தேவர்களையும்,
அதிதேவதைகளையும் படைக்க எண்ணிய மாத்திரத்தில் எழுந்து நின்றார்.
அவ்வளவிலேயே அனைத்தும் படைக்கப்பட்டு விட்டன. இவ்வியக்கம்
தொடர்ந்து முறைவழுவாது செயல்பட அறிதுயில் திருக்கோலத்தில் சயனித்து
அனைத்தையும் நிர்வகித்துக்கொண்டே அறிதுயிலில் உள்ளார்.

     திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர
பாத்மத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.
 1. ஸ்தாபனா - திருமாலை நின்ற திருக்கோலத்தில்
                 அமைத்து தொழுவது

     2. அஸ்தாபனா - அமர்ந்த திருக்கோலத்தில்
                    அமைப்பது

     3. ஸமஸ்தாபனா - பள்ளி கொண்ட திருத்தலத்தில்

     4. பரஸ்தாபனா - வாகனங்களில் பற்பல ரூபங்களில்
                   அமைப்பது.
     5. பிரதிஷ்டானா - சன்மார்ச்சையுடன் அமைப்பது.

     இவ்வகைத் திருக்கோலங்களில் ஆலயங்களில் அமைக்கப்படும்.
திருமால், யோகம், போகம், வீரம், ஆபிசாரிகம் என நால்வகைப்படுவர்.
யோகிகள் யோக மூர்த்திகளையும், குடும்பத்தில் உள்ளவர்கள் போக
மூர்த்திகளையும், வீரர்கள் வீர மூர்த்திகளையும், பகைவர்கட்குத் துன்பம்
விழைவிக்க விரும்புவர்கள் ஆபிசாரிக மூர்த்திகளையும் வணங்குவர். இன்று
போக, யோக மூர்த்திகளே பழக்கத்தில் அமைந்துள்ளன. வீர மூர்த்திகள் மிக
அரிது. ஆபிசாரிக மூர்த்திகள் இன்று இல்லவே இல்லை. இதனை
வேண்டும்போது அமைத்து அழித்து விடுவதுண்டு.

     108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான்
எழுந்தருளியுள்ள தலங்களின் எண்ணிக்கையே அதிகமாகும். நின்றது 67

     இதில்,

     கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்        39
     மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்        12
     தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்        14
     வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்        2

     இதேபோல் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள ஸ்தலங்களில்
எண்ணிக்கை 17.

     இதில்

     கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்     13
     மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்      3
     தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் இல்லை
     வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்     1
     இதேபோல் சயனத்திருக்கோல ஸ்தலங்கள்  24
இதில்,

          கிழக்கு நோக்கி நோக்கிய சயனம்    18
          மேற்கு நோக்கி நோக்கிய சயனம்     3
          தெற்கு நோக்கி நோக்கிய சயனம்     3
          வடக்கு நோக்கி நோக்கிய சயனம்     இல்லை.

     திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

     அவைகள்

     1. ஜல சயனம்
     2. தல சயனம்
     3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
     4. உத்தியோக சயனம்
     5. வீர சயனம்
     6. போக சயனம்
     7. தர்ப்ப சயனம்
     8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
     9. மாணிக்க சயனம்
     10. உத்தான சயனம்

1 comment: