Thursday, May 12, 2016

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்




ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.
வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வேங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் திரு லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்க்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.

வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வேங்கடநாதரை சந்தனம் அரைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும்போது 'அக்னி சூக்தம்' என்ற தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வேங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவறை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கெளரவித்தும் அனுப்பினார்.

துறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர்

வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

அதிசயங்களும் அற்புதங்களும்

பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

குரு ராகவேந்திரர் சுலோகம்

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

குரு ராயரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்

1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்[1]. அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:

    சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
    நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
    சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
    கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.
வெளி இணைப்புக்கள்

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்


ஷிர்டி சாய் பாபாவின் தாய் தந்தை யாவர்? சொந்த ஊர் எது ? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை..
சாயி மகான் 1854 ஆம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வருகை புரிந்தார். அதனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை..

சில ஆண்டுகள் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். அவரிடம் இளைப்பாறும்படி பாபா கூறினார்.
அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த சுத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் காணமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா சரியாக கூறினார்.. பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்..
சாந்த் பட்டேல், தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் பாபாவை தன் வீட்லேயே தங்க வைத்து உபசரித்தார்.. சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக ஷிர்டி வந்த போது, பாபாவையும் தன்னுடன் ஷிர்டிக்கு அழைத்து வந்தார்.
பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தை கண்ட மஹல்சாபதி என்னும் பூசாரி, அவரை சாயி என்று அழைத்தார்.
"சாயி" என்றால் பாரசீகத்தில் "சுவாமி" என்று பொருள். "பாபா" என்றால் இந்தியில் "அப்பா" என்று பொருள்.
இரண்டும் இணைந்து சாயிபாபா என்ற திருப்பெயரே நிலைத்து விட்டது..
சாயிபாபா ஷிர்டியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். ஷிர்டியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்ப மரத்தின் இலைகளில் அதன் இயல்பு கசப்பு சுவை மாறியது..
ஷிர்டி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார் ? என்று கேட்டார்கள்..
அதற்கு அவர், நானே அல்லா !, நானே சங்கரன் ! நானே ஸ்ரீ கிருஷ்ணர் ! நானே அனுமன் ! என்று கூறினார்.
ஆமாம் அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்..
பல ஆண்டுகள், ஒரு யோகியை போலவே வாழ்ந்த பாபா, பிச்சை எடுத்தே உண்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவ தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவை சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீக தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினர்.
கங்காகீர் என்னும் கர்வமிக்க ஞானி பாபாவை சந்தித்து, பாபாவின் மகிமையை சோதித்தார். பாபா தன் உள்ளங்கையிலிருந்து கங்கையை பெருக செய்ய, கங்காகீர் தன் தவற்றை உணர்ந்தார்..
பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணையை கொடுத்து வந்தனர்.
ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.. பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகளை எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவை தேடி பக்தர்கள் வர தொடங்கினர்..
ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்து கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவை தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும், அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருக செய்தார் பாபா..
தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.. சிரிக்க சிரிக்க பேசி குழந்தைகளை மகிழ செய்தார்..
பாபா பஜனையையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும்படி உற்சாகமூட்டினார்..
ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறாதாவர் பாபா.. ஒரு தாயை போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.
தொழுநோயாளிகள் மீது இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி, அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.
பாபா சாஸ்திரங்களையும், ஐயமற கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படைய செய்தார்.
பாபா மதங்களை கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார். மக்கள் அவரை சாயி மகாராஜ் என்று போற்றி கொண்டாடினர். பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கைவும், ஸபூரி (பொறுமையும், ஆகும்..
தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் உதி ( விபூதியையே, பிரசாதமாக தந்து, அவர்களின் நோயை நீக்கியவர் பாபா.
வாழ்வில் பொறுமையும், தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார்..
துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார்..
சாயிமகான் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் ஸ்தூல உடலை உகுத்தார்.